உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

7. தொல்காப்பியரும் வேளாளரும்

இவ்வாறு பண்டைக்காலந் தொடங்கிச் சீருஞ் சிறப்பும் உடையராய் வரும் வேளாள வகுப்பினரைச் சூத்திரரெனவும், இத்தகைய சீருஞ்சிறப்பும் இல்லாத ஏனை வகுப்பினரைப் பிராமண சத்திரிய வைசியரெனவுங் கூறினால் அதனை நடுவுநிலை பிறழா அறிவுடையோர் எவரேனும் ஒப்புவரோ? ஒரு சிறிதும் ஒப்பாரன்றே. அற்றன்று, செந்தமிழ்த் தொல்லாசிரியராகிய தொல்காப்பியனார் தாம் இயற்றியருளிய ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியத்துள் வேளாளரைச் சூத்திரரெனக் கூறிய தென்னையெனின்; இது தொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வில்லாச் செந்தமிழ்த் தனி முதல் நூலை நன்கு பயின்று அறியாதார் கூறுங் கூற்றாம். ஆசிரியர் தொல்காப்பியனார் வேளாளரை வேளாளரென்றே ஓதினரல்லது சூத்திரரென யாண்டும் ஓதிற்றிலர். அற்றன்று, சூத்திரர் என்னுஞ் சொல் வடமொழிப் பெயராகலின் பண்டைச் செந்தமிழ் நூலாகிய அத் தொல்காப்பியத்தின்கண் அச் சொல்லால் அவரைக் குறித்திலரெனின்; “வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னுஞ் சூத்திரத்தில் 'வைசிய எனும் வடமொழிச் சொல்லை அவர் எடுத்தாண்டிருத்தலின், வேளாளரையுஞ் சூத்திரரெனக் கூறல்வேண்டினாராயின் அவர் அச் சொல்லை அவர்க்குப் பெயராக வழங்காதிரார். இஃதொன்று கொண்டே வேளாளரைச் சூத்திரரெனக் கொள்ளுதல் தொல்காப்பியனார் திருவுளக்கருத்துக்கு இணங்குவதன்றென்பது பெற்றாம்.

அஃதொக்குமாயினும் அந்தணரையும் அரசரையும் வைசியரையுங் கூறியபின் அவர் வேளாளரை நான்காம் முறைமைக் கண் வைத்து வடநூலார் கூறுமாறே கூறுதலின், வேளாளரைச் சூத்திரரென வெளிப்படையாக வைத்துக் கிளந்து கூறிற்றிலராயினும், அவர் தம்மைச் சூத்திரரெனக் கூறுதல் தொல்காப்பியனார்க்கும் உடன்பாடேயாமெனின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/242&oldid=1591918" இலிருந்து மீள்விக்கப்பட்டது