உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

16. ஓம் என்னும் பிரணவம் தமிழுக்கே யுரித்தாதல்

அஃதொக்குமாயினும், எல்லா ஒலிவடிவு வரிவடிவு கட்கும் முதலாவது ஓங்காரமாகிய பிரணவமே என்பது பெறப் படுதலானும், அப் பிரணவம் வடமொழிக்கே உரித்தாகலானும், அப்பிரணவவடிவாய் விளங்கும் எல்லா வடமொழிக்கலைகளும் இறைவன் வாய்மொழியேயாம் என்று மாயாவாதியார் கூறுமாறென்னையெனின்; அவர் ஆராயாது கூறினமையின் அதுபொருந்தாக் கூற்றேயாம். பிரணவம் என்பது ஓ என்னும் ஒலியேயாம். ஓ என்பது நெட்டெழுத்து. நெட்டெழுத்து களெல்லாங் குற்றெழுத்துகளின் நீட்டமே யாதலால் முதலில் குற்றெழுத்தொலிகளும் அவற்றின்பின் அவற்றோடொத்த நெட்டெழுத் தொலிகளுந் தோன்ற நிற்கும். அகரந் தோன்றிய பிறகே ஆகாரந் தோன்றும். ஒகரந் தோன்றிய பிறகே ஓகாரந் தோன்றும்; ஒகரம் இன்றி ஓகாரந் தோன்றாது. இனித் தமிழ் மொழியில் மட்டும் ஒகரமாகிய குற்றொலியும் அதன் நீட்டமாகிய ஓகார ஒலியும் இருப்பக் காண்டுமன்றி, வடமொழியில் ஓகாரத்திற்கு முதலாகிய ஒகரஒலி வழங்கக் காண்கிலேம். குற்றொலி இன்றி அதன் நெட்டொலி வழங்குதல் ஏலாமையால் ஒகரம் இல்லாத ஓகாரம் வடமொழிக்கு உரியதாதல் யாங்ஙனம்? தமிழில் ஒகர ஓகாரம் இரண்டும் இருத்தலால், அவ்விரண்டுந் தமிழுக்கே உரியவாதல் நன்கு துணியப்படும். மேலும், ஓசையைக்குறிக்கும் ஒலி ஓசை ஓதை ஓலம் முதலிய தமிழ்ச் சொற்கள் ஒகர ஓகார ஒலிகளை உடையதாதல்போல, வடமொழிக்கண் உள்ள சப்தம் த்வநி முதலிய சொற்களில் அப் பிரணவ ஓசை காணப்படாமை யானும் பிரணவமாகிய ஓங்காரந் தமிழ்மொழிக்கே உரித்தாதல்

தெளிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/281&oldid=1591996" இலிருந்து மீள்விக்கப்பட்டது