உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70

❖ மறைமலையம் -3 ❖

இருந்தமையாலும் ஹாம்லெத் முதலிய அம் மூவரும் அவ்விரவின் குளிர்மிகுதியைப்பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சடுதியில் ஒரேஷியோ என்பவன் ‘இதோ அவ் வுருவம் வருகின்றது’ என்று கூவினான்.

தன் தந்தையின் ஆவியைக் கண்டதும் ஹாம்லெத் திடுமென அச்சமும் வியப்பும் அடைந்தான். முதல் அவன் தேவதூதர்களையும் தேவர்களையும் நினைந்து தம்மை அவர்கள் காக்கும்படி வேண்டினான்; ஏனென்றால், அது தீயதோ நல்லதோவென்றும், அது நன்மைக்கு வந்ததோ தீமைக்கு வந்ததோ வென்றும் அவன் தெரிந்துகொள்ளக் கூடாமையால், ஆனாற் சிறிதுநேரஞ் சென்றபின் அவனுக்குத் தைரியம் உண்டாயது.அவன் தந்தையின் உருவம் அவனை மிக்க இரக்கத் தோடும் பார்த்துத் தான் அவனுடன் பேச விரும்புவதுபோற் றோன்றியது. ஹாம்லெத் அவ் வுருவத்தை உற்று நோக்கிய போது, தன்தந்தை உயிரோடிருந்த காலத்து எவ்வண்ணம் இருந்தாரோ அவ்வண்ணமாகவே அது காணப்பட்டதனால், அவன் அதனை நோக்கி “ஹாம்லெத்* (ஹாம்லத் என்னும் இளைஞனின் தந்தை பெயரும் ஹாம்லெத் என்பதே யாம்) என்னும் அரசனே, என் தந்தையே, மிகவும் அமைதியாகத் தாங்கள் வைக்கப்பட் கல்லறையினின்றும் இப்போது, நீங்கள் வெளிப்பட்டு நிலவொளி பரந்த இந்த நிலத்திற்கு வந்த காரணம் இன்ன தென்று தெரிவிக்க வேண்டுகின்றேன். தங்கள் மனத்திற்கு அமைதியைத் தரத்தக்க தான ஏதும் யான் செய்ய வேண்டு மாயின் அதனை எனக்குத் தெரிவிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றான். இச் சொற்களைக் கேட்டதும், இருவரும் தனியே இருந்து பேசுவதற்குத் தக்கதாகத் தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு வரும்படி அவ்வுருவம் அவனை சைகைசெய்து அழைத்தது. ஒரேஷியோவும், மார்சிலசும் “இஃது ஏதோ ஒரு தீய பேயாக இருத்தலால் அதோ தோன்றுகின்ற கடற் பக்கத்திற்காவது,பயங்கரமான செங்குத்து மலைச் சிகரத்திற்காவது உம்மை ஏமாற்றிக்கொண்டுபோய் அங்கே தனது கரிய பயங்கரமான பேய் வடிவத்தைக் காட்டி உமது அறிவைத் திரிபு அடையச் செய்யு மாகையால் அதனைப் பின் தொடர்ந்து போகவேண்டாம்.” என்று சொல்லி அரசிளைஞனை மிகவுந் தடுத்தார்கள். ஆனால், அவர்கள் சொல்லிய மொழிகள் ஹாம்லெத் மனஉறுதியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/103&oldid=1623384" இலிருந்து மீள்விக்கப்பட்டது