உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
96

❖ மறைமலையம் - 3 ❖

பியூகாரெஸ்ட் என்னும் ஊரிற் பிரபல வைத்திய சாத்திரபண்டிதராய் இருக்கும் ஆஸ்டியூ என்பவரால், ஒருவர் ஓரிடத்தில் நினைத்த நினைவு தொலைவிலிருந்த பிறிதொரு தகட்டிற்சென்று பதிந்து தோன்றின வியப்பான நிகழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொலைவிற் றோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளை ஆராய்ந்தறிவதில் விருப்பம் வைத்தமையாலே அவரும் அவர்தம் நண்பரான இஸ்ட்ராடி பண்டிதரும், அந் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துப் பார்க்கும் ஆராய்ச்சி முறையால், ஒரு நினைவின் உருவத்தைத் தொலைவிற் சித்தஞ் செய்து வைக்கப்பட்ட மெல்லிய தகட்டின்மேற் பதியவைக்கக் கூடுமா என்பதனை உறுதிப் படுத்தல் வேண்டுமெனத் தீர்மானஞ் செய்தார்கள். இதனைச் செய்து பார்ப்பதற்கென்று குறிப்பிக்கப்பட்ட மாலைக்காலம் வந்தது. ஆஸ்டியூ பண்டிதர் தாம் படுக்கைக்குப் போகு முன்னரே நிழற் படம் எடுக்குந் தமது கருவியைத் தமது படுக்கையின் பக்கத்தே வைத்தார். இஸ்ட்ராடி பண்டிதரோ அவரை விட்டுப் பிரிந்து போய்ப் பல நூறுமைல் தூரத்திற்கு அப்பால் இருந்தனர். இவர் தம் நண்பரோடு செய்துகொண்ட ஏற்பாட்டின்படி தாம் தூங்கச்செல்லும் முன்பே, பியூகாரெஸ்ட் என்னும் ஊரில் தம் நண்பராற் சித்தஞ் செய்து வைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தகட்டின் மேல் தமதுருவம் படும்படி நினைத்துத் தமது நினைவை ஒருமுகப் படுத்தியிருந்தார். மறுநாட் காலையில் அவர் விழித்தெழுந்த பிறகு, தமது கனவில் அதனை உண்மையென்று கண்டமையாலே தமது முயற்சி நிறைவேறியதெனத் தெளிந்தார். உடனே அவர் தம்மிருவருக்குந் தெரிந்த மற்றொரு நண்பருக்கு அதனை எழுதித் தெரிவிக்கவே, அந்த நண்பர் ஆஸ்டியூ பண்டிதர் இருப்பிடத்திற்குச் சென்று, அவர் அம்மெல்லிய தகட்டிற் பதிந்த வடிவம் புலப்படுமாறு செய்விக்கும் முயற்சியிலிருக்கக் கண்டார். அத் தகட்டின்மேல் திருத்தமான மூன்று வடிவங்கள் காணப்பட்டன; அவற்றுள் ஒன்று மிகத் தெளிவாயும் உயிருள்ளது போன்றும் இருந்தது. அஃது இஸ்ட்ராடி பண்டிதர் நிழலுருக் கருவி* (photographic cam- era) யைக் கூர்ந்து நோக்குவதாக விளங்கக் காட்டியது; அக் கருவியின் கடைசி முனையானது அத் தோற்றத்திலிருந்து வருவதுபோற் றோன்றிய ஒருவகையான மின்னொளியாற்றுலங்கியது. இஸ்ட்ராடி பண்டிதர் பியூகாரெஸ்ட் என்னும் ஊருக்குத் திரும்பிவந்தபோது ஆவிவடிவான தமது படத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/129&oldid=1623820" இலிருந்து மீள்விக்கப்பட்டது