உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104

❖ மறைமலையம் - 3 ❖

கொண்ட வீண் எண்ணங்களின் தோற்றங்கள் அல்ல வென்பதும், அவைகள் உண்மையே யாகுமென்பதும், தங்கள் வீடுகளில் கூக்குரலொளிகளால் அலைக்கப்படுபவர்கள் ஆன்மதத்துவ இயல்பில் திறமை வாய்ந்த ஒருவருடைய துணையைப் பெறமாட்டுவார்களாயின் ஆவியுருவில் நிற்கும் எவரோ ஒருவர் தம்முடன் ஏதோ அறிவிக்க நாடுகிறாரென்று தெரிந்து கொள்வரென்பதும், நுண்ணுடம்பில் உலவும் ஆவியானது தனது இருப்பை அறிவிக்க இம் முறையைக் கைக்கொள்கின்ற தென்பதும் எனக்குச் சிறிதேனும் ஐயம் இல்லையாம்படி நாட்டியது. தமக்கு மிகவும் இன்றியமை யாததான ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்பும் ஆடவரும் பெண்டிருமே அவர்கள் என்று நீங்கள் உண்மைப் படுத்திக் கொள்ளுங்கால் அவ்வாவியின் வருகையில் இயற்கைக்கு மாறான தீமை ஏதும் இல்லை என்பது இனிது விளங்கும். தாம் இப் பருவுடம்பை விட்டுப் போயினும், இவ் வுடம்போடு கூடியிருக்கும் ஏனையோர்க்கு ஏதோ அறிவிக்க வேண்டுமென்னும் விருப்பம் இன்னும் அவ் வாவி யுருவில் நிற்பவர்கள்பாற் குடிகொண்டிருக்கின்றது.”

“மாணவகனுக்கு இன்பம் பயக்கும் ஆன்மதத்துவக் காட்சிகள் இன்னும் பல இருக்கின்றன. மானத ஆகாயத்தைப் பற்றி எனக்கு முதன் முதல் உண்டான அனுபவங்கள் பலவற்றில் ஒன்று கும்பலான ஒரு நாடக சாலையில் நிகழலாயிற்று. நண்பர்கள் சிலரோடு யான் மெல்போர்ண் என்னும் இடத்தில் நடைபெற்ற நடனவிருந்திற்குச் சென்றிருந்தேன். அப்போது சடுதியிலே என்னெதிரிற் றோன்றிய ஒரு மானதக் காட்சியை உணரலானேன். எங்கள் சொந்த வீடு எனக்கு நேர் எதிரிலே நிற்பதாக உணர்ந்தேன். யான் அதனை மிகவுந் தெளிவாகப் பார்க்கக் கூடியதா யிருந்தது; பின்னும் அதனை யான் உறுத்துப் பார்த்தபோது அதன் சுவரின் ஊடே என் அன்னையின் அறையை நேரே கண்டேன்; பின் அதனுள்ளே என் அன்னையார் இறந்துபோனாற்போற் படுத்துக் கிடக்கக் கண்டேன். ஓர் அரைமணி நேரம் வரையில் இத் தோற்றத்தை என்னிடத்தினின்றும் அகற்றப் பார்த்தேன்; ஆயினும் முடிவில் அதனை நெடுநேரந் தாங்கக்கூடாதவன் ஆனேன்; ஏனெனில் அஃது அவ்வளவு உண்மையாய்த் தோன்றியது.யான் அந்த நடன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/137&oldid=1623829" இலிருந்து மீள்விக்கப்பட்டது