உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
138

❖ மறைமலையம் - 3 ❖

விளங்குகின்றது; அதன் அளவினைக் கணக்கிட்டுப் பார்த்த வானநூல் வல்லார் அஃது இந் நிலவுலகத்தைவிட ஒரு கோடியே இரண்டு லட்சம் மடங்கு பெரியதென்று முடிவு கட்டியிருக்கிறார்கள். இதனை இன்னுந் தெளிவாய்க் காணல் வேண்டின், சூரியனை இரண்டடியுயர முள்ள ஒரு பந்தாகவும் இம் மண்ணுலகத்தை ஒரு பட்டாணிக் கடலையாகவும் பாவித்து அவ் விரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சூரியனுடைய பேரளவும் இந்த நிலத்தின் சிற்றளவும் கருத்தில் நன்றாய்ப் பதியும். இங்கிருந்து பார்ப்பவர்க்குச் சூரியன் நன்கு புலப்பட்டுத் தோன்றுதல்போலச் சூரிய மண்டிலத்திலிருந்து நோக்குவார்க்கு இந் நிலவுலகம் ஒரு கடுகளவு கூடத் தோன்றாது. இனிச் சூரிய மண்டிலம் அளவிடப்படாத அழல் ஆவியாற் சூழப்பட்டிருத்தலின் அது பேர் ஒளிப் பிண்டமாய்த் திகழ்கின்றதென்றும், அதிற் பல்லாயிர மைல் அகல நிகளமுள்ள கருமையான இடங்கள் பல காணப்படுகின்றன வென்றும் இஞ்ஞான்றை வானநூல்வல்லார் தொலைவு நோக்கிக் கண்ணாடி* (Telescope) யின் உதவிகொண்டு தெரிந்து எழுதுகிறார்கள். அது மிகவும் நெடுந் தூரத்திலுள்ள தாகையால் அதன் தன்மைகளையும் அங்குள்ள பொருள்களையும் விரிவாகவும் நுணுக்கமாகவுந் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. என்றாலும், வானநூல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ஆன்றோரான ஹெர்ஷல்* (Sir John Herschel) என்பவர் ‘இந் நிலவுலகத்துள்ள பருவுடம்போடு கூடிய உயிர்கள் உயிர்வாழ்தற்கு ஏலாத அத்துணைப்பெரிய அழல் நிரம்பிய இயற்கையுடையது சூரிய மண்டிலமாயினும் அம் மண்டிலத்தின் இயல்புக்கு ஒத்த உடம்போடு கூடிய உயிர்கள் அங்கு வாழுமென்பது அறிவின் அனுபவத்திற்கு இசைந்த தாகும்,’ என்னுங் கருத்துப்பட எழுதியிருக் கின்றாராகலின், ஞாயிற்று மண்டிலத்திலும் அதற்கு இசைந்த உடம்போடுலவும் உயிர்கள் உண்டென்பது தேற்றமேயாம். இவ்வுண்மை காணமாட்டாதவான நூற் புலவரிற் பலர் ஞாயிற்று மண்டிலத்தில் உயிர்கள் இல்லை என்று தாம் அவ்வுண்மையை முற்றுந் தெரிந்தாற்போற் கூறினார். மேலே காட்டியவாறு ஞாயிற்று மண்டிலத்தினும் எத்தனையோ பங்கு மிகச் சிறிதாகிய இந் நிலவுலகம் உயிர்கள் உறைதற்கு இடமாக அமைக்கப்பட்டிருக்க, மிகப் பெரிதான சூரியவுலகம் மாத்திரம் உயிர் வாழ்க்கையில்லாத வெற்றிடமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/171&oldid=1624590" இலிருந்து மீள்விக்கப்பட்டது