உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145



24. வியாழ மண்டில இயற்கை

இனிப் பிருகற்பதி உலகமெனப் படுவதாகிய வியாழ மண்டிலம் நமது நிலவுலகத்திற்கு அணிமையிலுள்ள மண்டிலங்களிற் சூரியனைத் தவிர ஏனை எல்லாவற்றைவிட மிகவும் பெரியதாகும். நமது மண்ணுலகத்தைப் போன்ற ஆயிரத்து முந்நூறு உலகங்களை ஒருங்கு சேர்த்துத் திரட்டினால், அங்ஙனந் திரட்டப்பட்ட பிண்டம் வியாழ மண்டிலத்தின் அளவினை ஒப்பதாகும் என வானநூற் புலவர் ஒருவர் கணக்கிட்டிருக்கின்றார். இது சூரிய மண்டிலத்திற்கு நாற்பத் தெட்டுக்கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்திலும், நமது நிலமண்டிலத்திற்கு முப்பத்தொன்பதுகோடி மைல் தூரத்திலும் சுழன்று செல்கின்றது. இவ் வியாழ மண்டிலத்தைச் சூழ அரைக்கச்சை போன்ற கருகலான பட்டைக்கம்பி வடிவங்கள் காணப்படுகின்றன; இவற்றுள் இரண்டு பட்டைகள் அகலமாகவும் இவ்விரண்டின் இருபுறத்தும் உள்ளவை குறுகலாகவும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அம் மண்டிலத்தின் நடுவேயோடும் வரைக்குப் பக்கத்தே நேர்வரிசைகளாகவே ஓடுகின்றன. இவை என்ன வென்று ஆராய்ந்த வானநூல் ஆசிரியர் சிலர் இம் மண்டிலம் தடிப்பான முகிற் கூட்டங்களாற் சூழப்பட்டிருக்கின்ற தெனவும், அம் முகில்களின் நடுவேயுள்ள பிளப்புக்களின் வழியே தோன்றும் அம் மண்டிலத்தின் இறுகிய நிலமே அங்ஙனம் கீற்றுக் கீற்றாகக் காணப்படுகின்றதெனவும் கருதுகின்றனர். அதனைச் சூழ்ந்த முகிற் கூட்டங்கள் அடிக்கடி நிலை மாறக் காண்டலால் அங்கே பெரும்புயற் காற்றுக்கள் அடிக்கின்றனவென்றும் உய்த்துணர்கின்றனர். புள்ளி வடிவங்கள் பல இம் மண்டிலத் தின்கண் அடிக்கடி காணப்படுகின்றன. 1878ஆம் ஆண்டிலிருந்து மிகவுஞ் செந்நிறமான ஒரு கறை வடிவு பல ஆண்டுகள் வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/178&oldid=1624597" இலிருந்து மீள்விக்கப்பட்டது