உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
159

விசிறிபோல் இணைக்கப்பட்ட தோலுடையதாய் இருக்கின்றது; நிலயாமையோ அவ்வாறின்றி அடிகளில் விரலுடையதாய்க் காணப்படுகின்றது. இங்ஙனமே இந் நிலத்தின்கட் பல்வேறிடங்களில் உயிர்வாழும் செந்துக்களுக்கும் மாந்தர் களுக்கும் அவ்வவ்விடத்திற் கேற்ற உடம்புகள் இயைந் திருத்தலைச் சிறிதாராய்ந்து பார்ப்பவர்களுங் கண்டுகொள்ளக் கூடும். இவ்வாறு ஓருலகத்திலேயே பலவே றியல்புகளும் அவ்வியல்புக்கொத்த உடம்புகளுங் காணப்படு மாயின், நெடுந்தூரத்திற் சுழலும் பலவேறு தன்மையுடைய உலகங்களில் உள்ள பல உயிர்களுக்கும் பலவகைப்பட்ட உடம்புகள் உண்டென்பதை யாம் விண்டு கூறுதலும் வேண்டுமோ? ஓருயிர் தான் செல்லும் உலகத்தின் இயல்புக்குப் பொருந்தின ஓர் உடம்பை மேற்கொள்ளும் என்றும், அங்ஙனம் மேற்கொள்ளப் படும் அது ‘பூதசாரவுடம்பு’ எனப் பெயர் பெறும் என்றும் நம்முடைய ஞான நூல்களும் தெளிவாகக் கூறுகின்றன. இது நிற்க. இவ்வாறெல்லாம் உயிர்கள் பலவுலகங்களிற் செல்லுவதற்கும், அங்குள்ள வுயிர்கள் இங்கு வந்து பிறவி யெடுப்பதற்கும் நம் நனவினும் கனவினும் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளே ஒரு பெருஞ்சான்றாம். நனவு நிலையிருக்குங்கால் கனவு பொய்யாம் என்றலும், கனவு நிலையிருக்குங்கால் நனவு பொய்யாம் என்றலும் உயிரின் நினைவுத்தன்மை யறிந்தோர்க்குச் சிறிதும் ஆகாவாம்; நினைவி னியற்கையை ஆய்ந்துணரமாட்டாத பேதை மாக்களே ஒருநிலையிலிருக்குங்காற் பிறிதொரு நிலையைப் பொய் யென்பர். காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருளென்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்டபின் அவர் காசிமாநகரை இல்பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருந்துவதில்லாப் பித்துரையாதல் போல, ஒரு நிலை யிலுள்ளவர் பிறிதொரு நிலையின் உண்மையுணராமல் அதனைப் பொய்யென் றுரைத்தல் பெரியதோர் அறியாமையும் மயக்க வுணர்ச்சியுமாம். கனவிற்றோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலான முற்பிறவியின் அனுபவங்களாகும்; மற்றுப் பல இப் பிறவியின் அனுபவங்களாகும்; சிறுபான்மைய இனிவரும் நிகழ்ச்சிகளுக்கு முன் அனுபவங்களாகும். முற் பிறவியின் பின்அனுபவங்களுக்கும், இனி நிகழ்வனவற்றின் முன் அனுபவங்களுக்கும் உண்மையாய் நிகழ்ந்த சிற்சில உதாரணங்களை ஈண்டெடுத்துக் காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/192&oldid=1625167" இலிருந்து மீள்விக்கப்பட்டது