உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
179

தல்லாமையால், இப்பருவுடம்புக்கு இளைப்புத் தீரும் வரையில் உயிரை இருளில் அழுத்திவைத்திருந்து, அவ்விளைப்புத் தீர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அதன் அறிவை வெளிமுகமாக விடுத்துத் தானுங் கலைந்து போகும் என்றறிக.

இனி, இங்ஙனங் காட்டப்பட்ட இவ்விருட்டூக்கம் அருட்டூக்கம் என்னும் இரண்டில் இருட்டூக்கம் பெரும்பாலும் எல்லா வுயிர்களிடத்துங் காணப்படுகின்றதென்பதனை மேலே கூறிப்போந்தாம். ஆனால் உயிர்களின் அறிவை இவ்விருட்டூக்கத்திற் செல்லவிடாமல் ஒரோ வழி திருப்பி அருட்டூக்கத்திற் செல்லவிடக்கற்றுக்கொள்வேமாயின், அதனால் நாம் அளவிறந்த நன்மைகளை அடையலாம்; நல்வழியிற் செலுத்தலாம்; கல்வியில் விருப்பமில்லாதவர்களை அக் கல்வியை மிக விரும்பும்படி செய்விக்கலாம்; நினைவு மிகுதியுமில்லாதவர்களுக்கு அது மிகுந்து வலுப்படும்படி செய்திடலாம்; கணவனோடு இணங்கி வாழாத மணமகளை அவனோடு மிக இணங்கி வாழப்புரியலாம்; குடியர்கள் குடியினை விடவும் சூதாடுவோர் சூதினை நீக்கவும், வேசி வீடே அடைக்கலமாய்க் கிடப்போர் அதனை வெறுத்து விலகவும் தீய நினைவுகளிற் பழகினோர் அப்பழக்கத்தை முற்றத் துறந்து நன்மக்களாகவும், வறியர்கள் செல்வராகவும் செய்து இன்புறுத்தலாம்.

இவை மட்டுமோ? பலவகை நோய்களாற் பற்றப்பட்டு மருந்துகள் உண்டும் அவை நீங்கப்பெறாமல் அல்லும் பகலும் நைந்து தம்முயிரையே வெறுத்துவிட்ட நோயாளிகளும் அக்கொடு நோய் தீர்ந்து தூய நலமுடையவராய் இன்புற்று வாழச் செய்விக்கலாம். மக்களைப் பெறாமல் மலடுபட்டோர் அம்மலடு தீர்ந்து மக்களைப் பெறவும், ஆண்டன்மை பெண்டன்மை இழந்து அலிகளாகவும் பேடிகளாகவும் இருப்போர் அவ்வலித் தன்மையும் பேடித் தன்மையும் விலகி விறல்மிக்கவராய்ப் பொலியவும், கூன் குருடு முதலான தீராக் குறையுடையோர் அக்குறை தீர்ந்து நிறைவெய்திக் களிப்புறவுஞ் செய்திடலாம். இவ்யோகநித்திரை என்னும் வியத்தகு முறையை முற்றத் தெரிந்து பழகுதலால் மக்கள் அடையாத நன்மைகள் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/212&oldid=1627659" இலிருந்து மீள்விக்கப்பட்டது