உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
182

❖ மறைமலையம் - 3 ❖

மருந்தினால் நோய் நீக்கும் முறையானது கைவிடப்பட்டு வருகின்றது. அதற்கு மாறாக ‘அறிதுயில் மருத்துவ விடுதி’களும் ‘இயற்கை முறைக்கழக’ங்களும் ஆங்காங்கு மிகுந்து வருகின்றன. இந்த வித்தையின் அருமை பெருமைகளையும் இதனைப் பயன்படுத்தும் முறைகளையும் தெளிய எடுத்துப் போதிக்கும் நூல்களும் செய்தித்தாள்களும் அங்கே நாடோறும் புதிய புதியவாகத் தோன்றி உலவிக்கொண்டிருக்கின்றன.

இச் செய்தித்தாள் புத்தகங்களை வாங்குதற்பொருட்டும் இவ்வித்தையைத் தெரிந்து பழகுதற்பொருட்டும் கோடிக்கணக்கான பொன் செலவிடப்படுகின்றது. இவ்வளவு முயற்சியும் பொருட் செலவும் இடைவிடாத ஆவலும் இவ்வித்தைக்கு அயலவரான அமெரிக்கா நாட்டு நன்மக்களிடம் காணப்படுவனவாகவும், இதற்குப் பழமைக் காலந்தொட்டு முற்றும் உரியவரான நம் இந்திய நாட்டு மக்கள் இதிற் சிறிதும் நோக்கம் இன்றி அறியாமை யென்னும் முழு இருளில் அமிழ்ந்திக் கிடப்பது பெரிதும் வருந்துதற்குரியதொன்றாம். இவ் வித்தையானது இந்தத் தமிழ்நாட்டில் நமது தமிழ் மொழியில் முதன் முதல் எம்மாலே தாம் எழுதப்படுகின்ற தென்று துணிந்து சொல்லப்படும். இவ் வித்தையை அமெரிக்கர் அறிந்த அளவினும் மேலாகத் தெரிந்து விளக்குவதற்குத் திருவருள் எமக்கு உதவி புரிந்தது. தமிழ், ஆரியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள கலை நூல்கள் யாம் பயிலுதற்குத் திருவருள் இடஞ் செய்தமையால், இம்மூன்றிலும் இவ்வித்தையைப் பற்றி யாம் தெரிந்தவற்றை ஒன்று சேர்த்து அவற்றோடு எமது பழக்கத்தையுங் கூட்டிஇஃது எழுதப்படுதலால் இந்நூலில் இனிது விளக்கப்படும் இவ்வித்தையின் பாகுபாடுகள் மிக மேலானவையாம் என்றும், இவற்றின் பழக்கத்தால் விளையும் பயன்கள் மிக மேலானவையாம் என்றும் அன்பர்கள் மனத்தில் அமைத்தல் வேண்டும். அது நிற்க.

இனி, இவ்வறிதுயிலானது சூக்குமசரீரம் முதலாக வரவர நுணுகிப்போகும் நுண் உடம்புகளில் வருவிக்கப்படுவதாகும். கட்புலனாகும் பருவுடம்பே தூலசரீரம் எனப்படும். இப்பரு வுடம்பின் உள்ளே, ஒன்றினுள் ஒன்றாய் அமைந்த வெங்காயச் சருகுகள்போல ஒன்றினுள் ஒன்றாய் அடங்கியிருக்கும் நுண்ணிய உடம்புகள் வேறு நான்கு இருக்கின்றன. அவற்றிற்கு நுண்ணுடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/215&oldid=1627662" இலிருந்து மீள்விக்கப்பட்டது