உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
185

அருட்பெருங்கடலாகிய ஆண்டவன் உயிர்களை உயிர்களை இடைவிடாது பிறவிக்கு வரச்செய்து மாயா சக்கிரத்தில் வைத்துச் சுழற்றிக்கொண்டே இருப்பான் என்க.

இந்தப் பருவுடம்பு பெற்றதனால் அடையும் பயன்யாது? என்று சிறிது ஆழ்ந்து சிந்திமின்கள். நம்முடைய உயிர் பழமைக்காலந்தொட்டு மருள் வசப்பட்டே நிற்கின்றது. இந்த மருள் நமக்கு எப்போது எவ்வாறு வந்தது என்று எவ்வளவுதான் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும் அவ்வியல்பு நமக்கு ஒரு தினைத்தனையும் விளங்கவில்லை. அஃது ஒரு பெருமறை பொருளாகவேயிருக்கின்றது. சிவஞானபோதம் என்னும் ஞான நூலிலே இம்மருளானது உயிர்களிடத்தில் அநாதியாகவே தொடர்புபட்டு நிற்கின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது; இது தான் முடிவான கருத்தாகவுந் தோன்றுகின்றது. எப்படியானாலும், இந்த மருள் நம்மைவிட்டு அகலும் பொருட்டாகவே அருள் நிதியான ஆண்டவன் உயிர்களுக்கு அடுத்தடுத்து எண்ணிறந்த பிறவிகளைக் கொடுத்தருளி வருகின்றார். இந்தப் பருவுடம்பை எடுக்குமுன் பேரிருள் வடிவான மருளிலே அழுந்திக்கிடந்த உயிர் இவ்வுடம்பை எடுத்தபின் சிறிது அறிவுவிளங்கப் பெறுதலைப் பழக்கத்திற்றெளிவாய் அறிந்திருக்கின்றோம். இந்தப் பருவுடம்பின்றி உயிர்க்கு அறிவு சிறிதும் விளங்குவதில்லை. சிறிதளவு விளங்குதற்கு இடந்தருகின்ற இப்பருவுடம்பில் நின்று கொண்டே நாம் இடையறாது முயன்று, நமதறிவை மருளினின்றும் பிரித்து அருளிலே செல்லவிட வேண்டும். எவ்வளவு விரைவாக நாம் நமதறிவை மருளினின்றும் அகற்றி அருளிற் படிவிக்கின்றனமோ, அவ்வளவு விரைவில் நாம் இப்பிறவித் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தின் முழுகி நிலைபெயராது இருப்போம்.

இங்ஙனம் நாம் அருளிலே செல்லுதற்கு ஓர் இன்றியமையாத் துணைக்கருவியாக வாய்ந்த இப்பருவுடம்பின் பயனை மக்கள் ஒவ்வொருவரும் நினைவில் இருத்தவேண்டும். இவ்வுடம்பாற் பெற்ற இப்பயனை வீணே இழந்துபோகலாகாது. பொன்னும் பொருளும் பிறவும் நிலையல்ல. எல்லாம்வல்ல முதல்வன், நாமே முயன்று அவனது திருவருளின்பத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/218&oldid=1628253" இலிருந்து மீள்விக்கப்பட்டது