உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
199

துடிதுடித்து இந்நிலத்திலேயே நிரயத்துன்பத்தை எய்துகின்றனர்! அந்தோ! இவர் தமக்குள்ள கல்வியானுஞ் செல்வத் தானுந் தாமும் பயன்பெற்றுப் பிறரையும் பயன்படச்செய்ய அறியாமல் தாம் எப்பொழுதுந் துன்பத்திற்கே ஆளாகிப் பிறரையும் வருத்திப் பேய்போல் அலைதல் பெரிதும் வருந்தத்தக்கதேயாம். இத்தன்மைப்பட்டவர் முகத்தில் அமைதியே இராது, மூதேவி குடிகொண்டிருப்பள். இவரைப் பார்ப்பவரெல்லாம் இயல்பிலே அருவருப்படைகின்றனர், இவர் சொற்களில் நயமே இருப்பதில்லை. இவர் தமக்கு நெருங்கிய உறவினராயுள்ள மனைவி மக்கள் பெற்றார் உற்றார் உடன்பிறந்தார் முதலியவர்களுங் கூட இவரைக் கண்டால் வெறுப்படைகின்றனர். இங்ஙனமானால் இவரைக் கண்ட பிறர் இவரை வெறுப்பது சொல்லவும் வேண்டுமோ? இவர் தம்மை யொத்த இழிகுணமுடைய சிலர் கூட்டத்திலே சிறிதுநேரம் மகிழ்ச்சி கொண்டாலும், அவ்விழிஞர் கூட்டத்திலும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமையுற்றுப் பழித்துக் கூறுதல் நடைபெறுதலால், அங்கும் அவர் துன்பமே உழக்கின்றார். இவ்வாறு அழுக் காறுள்ளவர் அவ்வழுக்காற்றினாலேயே கேடு அடைதலை இனிது உணர்ந்தன்றே திருவள்ளுவ நாயனார்:

“அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார், வழுங்கியுங் கேடீன் பது.”

என்று அருளிச் செய்தார். பகைவர் கேடுசெய்ய வேண்டாமல் தம்மிடத்துள்ள பொறாமையே தம்மைக் கெடுத்து இம்மை மறுமை இன்பங்களை ஒருங்கு இழக்கச் செய்யுமாதலால், அழுக்காறுடையார் அவ்வழுக்காற்றினைத் தம்மிடத் தினின்றும் முதலறப் பெயர்த் தெறிந்து அமைதிபெறுதலே நன்றாம்.

பிறர்க்குவரும் உயர்ச்சி கண்டு மனம் புழுங்குதல் எத்தகையோரிடத்தும் பொதுவாய்க் காணப்படுகின்றது. அம்மனப் புழுக்கம் தமதுள்ளத்து வேர்க்கொள்ளும் முன்னரே உடனே அதை மாற்றி வேறுவழியில் திருப்புதல் வேண்டும். யாங்ஙனமெனின் காட்டுவதும். ‘இவர்க்கு வந்த இத்தனை உயர்ச்சியும் இவரிடத்துக் காணப்படும் நல்லறிவு நற்குண நற்செய்கை நற்பொருள் நற்கல்வியால் வந்ததேயாகும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/232&oldid=1628273" இலிருந்து மீள்விக்கப்பட்டது