உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
219

கண்செவி முதலாயின புறப்பொருள்களை முனைப்பின்றிப் பொதுநோக்காற் பார்க்கும்படி விடுதலே செயற்பாலதாம். கைகால்கள் எந்நேரமும் மனதொடுகூடியே நடத்தல் வேண்டும் என்று நாம் சொன்னதுகொண்டு, கண் செவிகளும் அங்ஙனமே அதனோடுகூடி நடைபெறல் வேண்டும் போலும் என எண்ணி மாணாக்கர் மயங்காதிருத்தற் பொருட்டுக் கால்கைகளின் றொழில் நிலைகளைப்பற்றி ஓதவந்த இவ்விடத்திற் கண் செவிகளின் இயக்க முறைகளையும் சிறிதெடுத்துக் காட்டினேம் என்க.

அங்ஙனமாயின்,பிறிதொன்றை நினைக்குமிடத்தும் பிறர் ஒருவரோடு பேசுமிடத்தும் மனவுணர்வை அந்நினைப்பிலும் பேச்சிலும் ஒருமுகப்படுத்தி நிறுத்துதலே முறையாயினும் இவற்றிற்காகக் கால்களைச் சிறிதும் ஆட்டாமல் அசையாமல் கட்டைபோலவுங் கற்போலவுங் கிடக்கவிடுதல் மிகவும் வருத்தமான பழக்கமாய் முடியுமேயெனின்; நமது கருத்து அஃது அன்று. ஒன்றை நினைக்குமிடத்தும் ஒருவரோடு பேசுமிடத்தும் நினைவு கலையாதிருக்கும் பொருட்டு அந்நேரங்களில் உடம்பின் உறுப்புகளை ஆட்டாமலும் அசையாமலும் வைத்துக் கொள்ள வேண்டுமென்றதேயன்றி, வறிதேயிருக்கும் மற்றச் சமயங்களில் அங்ஙனம் அவற்றை வைத்திருக்க வேண்டுமென்று கூறினோ மில்லை. ஆடாமலும் அசையாமலும் உறுப்புகளை எப்பொழுதும் வைத்திருத்தல், அவ்வுறுப்புகளின் வலிவைக் குறைக்குமாதலால்,சும்மா இருக்குஞ் சமயங்களில் அவற்றிற்கு நலம் உண்டாகும் பொருட்டு அவற்றை நினைவோடு கூடி ஆட்டுதலும் அசைத்தலும் வேண்டும். அதுநிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/252&oldid=1625681" இலிருந்து மீள்விக்கப்பட்டது