உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
243

உருகுகின்றதே! இனித் தங்களை உயிரோடு பார்ப்பேனோ, இல்லையோ! என்செய்வேன்!' என்று மிக மிக நைந்தார்போற் கூறிவிட்டுப் போனார். இவர் சென்றபின் இவர் பேசிய சொற்கள் நோயாய்க் கிடக்கும் அந்நண்பர் உள்ளத்தில் ஆழப்பதிந்து அவரைப் பெரிதுங் கலங்கச்செய்து, அவர்க்கு அந்நோயைப் பின்னும் மிகுதிப்படுத்திவிட்டன. பின்னுஞ் சில நாட்களில் இவர் எழுந்து நடக்கவும் மாட்டாதவரானார்.

அதன்பின் நாலாந்தரமாக மற்றொருவர் அவரைக் காணவந்தார்; வந்தவர் அந்நண்பரைக் கண்டு அவர் பேசவும் வலியற்றவராயிருத்தலாற் சிறிதுநேரம் ஆறுதல் மொழிகளைப் பேசிவிட்டுப் போய் மற்ற மூவரையும் அழைத்து 'இனி நம் நண்பரிடத்தில் இவ்வாராய்ச்சியை நிறுத்திக்கொள்ளல் வேண்டும். உருக்கத்தோடும் நினைவு முனைப்போடும் நாம் பலமுறையிற் றனித்தனியே சென்று சொல்லிய சொற்கள் அவரை மிகவுங் கடுமையான நோயில் அமிழ்த்திவிட்டன. இனி நாம் முன் முறைகளிற்போலவே 'தனித்தனியே சென்று அவர் அந்நோயினின்றும் மீண்டு முன்னிருந்த நன்னிலைமைக்கு வரும்படி செய்தல் வேண்டும்' என்று வற்புறுத்திக் கூறினார் எல்லாரும் அதற்கு இசையவே, நாலாவதாகச் சென்ற இவரே திரும்பவும் மறுநாட் காலையில் அந்நண்பரிடஞ் சென்று அவரைக் கண்டவுடன் முகமலர்ச்சியுடையவராய், 'நண்பரே, நேற்று இருந்ததை விடத் தாங்கள் இன்றைக்குச் செவ்வையாகக் காணப்படுகின்றீர்களே. மருந்துகளிற் றீராத இந்நோய் ஏதோ இறைவனருளால் தீர்வது போற் றோன்றுகின்றது. தாங்கள் மிக நல்லவர்களாயும் ஐயனிடத்தில் அன்புடையவர்களாயும் இருத்தலால், ஆண்டவனே தங்களுக்கு வந்த நோயைத் தனது பேரருளால் நீக்கி வருகின்றார் என்று நம்புகின்றேன்.

இன்னுஞ் சில நாட்களில் தாங்கள் முற்றிலும் இந்நோய் தீர்ந்து நலமடைவீர்களென்பது திண்ணம்.' என்றுரைத்தார். இவ்வினிய சொற்களைக் கேட்டதும் அந்நண்பருள்ளம் கிளர்ச்சி அடைந்தது; தமக்கிருந்த நோய் ஏதோ ஆண்டவன் றிருவருளால் தீர்ந்து வரத் துவங்கியிருப்பதாகவே நம்பத் தலைப்பட்டார். அன்று முதல் அவர்கிருந்த நோயும் உண்மையாகவே நீங்கிப் போகலாயிற்று. அவரைப்போலவே மற்றை மூவரும் இடையிடையே சிற்சில நாட்கள் கழித்துத் தனித்தனியே சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/276&oldid=1626085" இலிருந்து மீள்விக்கப்பட்டது