உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
249

கண்களை உற்றுநோக்க நோக்க மூளையில் அறிவாற்றல் மிகுதியாய்க் கிளைக்கும்.இந்த வகையாக,முதலில் கால் நாழிகையும் பிறகு காலேயரைக்கால் நாழிகையும்,அதன் பின் அவரை நாழிகையும், கடைசியாய் ஒருநாழிகையுமாக நாளுக்குநாள் இங்ஙனம் உற்றுப்பார்க்குங்கால் அளவையினை ஏற்றிக்கொண்டே போதல் வேண்டும். ஒருநாழிகை நேரம் கண் இமையாமற் பார்க்கக் கூடிய ஆற்றல் வந்தால், கண்ணின் நரம்புகளும் மூளையும் வலிவேறி நுட்ப ஆற்றல் நிறைந்தன வாயிருக்கும்.

இவ்வாற்றல் வந்து கூடியபின் கண்ணாடியிற் பார்த்தலை விடுத்துத், தமக்கு எதிரே வருபவர்களின் கண்களை அவர் ஐயங்கொள்ளாதபடி உற்றுப் பார்த்தற்குச்சிறிது சிறிதாய்ப் பழக்கஞ்செய்து வரல்வேண்டும். பிறர் கண்களை உற்றுப் பார்க்கும்போது, ஏன் இங்ஙனம் இவர் பார்க்கின்றார் என்று அவர் உன்னிக்கும்படி வந்தால் உடனே பார்வையை அப்புறந் திருப்பிக் கொள்ளல்வேண்டும். பிறர்க்கு ஐயமும் அருவருப்பும் வருத்தமும் வராதபடி உற்றுப்பார்க்குந் திறத்தைப் பழகிக் கொண்டால், பிறர்தம் நினைவுகளின் தன்மையை அறியும் அறிவு வாய்ப்பதோடு, அவரை அடக்கியாளும் வன்மையும் வரவரமிகும். தம்மையொத்த மக்களைத் தாம் உற்றுப்பார்க்கையில் அவர்க்கு நன்மை வரவேண்டுமென்றும்,தாம் அவர்க்கு நன்மைசெய்யும் ஆற்றலையுடையராக வேண்டும் என்றும் நினைத்தல் அல்லாமல், அவர்க்குத் தீமைசெய்ய நினைத்தலாகாது. நன்மையான ஓர் அரும்பொருள் அவரால் ஆகவேண்டியிருந்தால் அதனை அவர் முடித்துத் தருவாராகவென்று உன்னிப்பாய் நினைக்க இங்ஙனம் முயன்றுவருதற்கு இடையிடையே நினைந்தபடி ஆகாமல் தவறுகள் நேருமானாலும், அடுத்தடுத்து விடாமுயற்சியாய்ப் பழகப்பழகப் பின் நினைத்தபடியெல்லாம் ஆம் என்பது திண்ணம். ஒருவிதையை நிலத்தில் ஊன்றினால் அது தன்றன்மைக்கு ஏற்பச் சில நாளிலோ அன்றிப் பல நாளிலோ முளைத்தலைக் காண்கின்றோம். ஊன்றியவிதை ஊன்றியவுடனே பயன்தர வில்லையேயென்று வருந்துவார் உளரோ. அதுபோலவே, ஓர் அரிய முயற்சியைத் தொடங்கினவர் தொடங்கின அப்பொழுதே அதன் பயனை எதிர் பார்த்தல் ஆகாது; அது தன்பயனைத் தருதற்குரிய காலம் வருமென்றும், தானெடுத்த முயற்சி தவறாதென்றும் உறுதியாய் நினைந்திருத்தலே செயற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/282&oldid=1626092" இலிருந்து மீள்விக்கப்பட்டது