உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
286

❖ மறைமலையம் - 3 ❖

அவன் கைகள் அரையை அழுத்துவதைவிட்டு அவனது மார்பின்மேற் குறுக்கிட்டுக் கிடந்தன. அவன் இப்போது அமைதியான நல்ல உறக்கத்தில் இருக்கின்றான் என்பதை அவனது முகம் விளங்கக் காட்டிற்று. அம்மருத்துவர் பலவற்றைப்பற்றி வினவியும், அவன் பெயரைச் சொல்லி உரக்கக்கூவியும் அவன் ஏதொன்றும் அறியவில்லை.

அதன்மேல் அவ்வெள்ளைக்கார மருத்துவர் அவனைக் கிள்ளிப் பார்த்தும் அவன் அசையவில்லை; அதன்பின் ஒரு குண்டூசியை வருவித்துத், தமக்கு உதவியாய் நிற்கும் வங்காளி மருத்துவரை உற்றுநோக்கும்படி கற்பித்து, அவ்வூசியை அந்நோயாளியின் இடுப்பின் பின்புறத்தே குத்தி நுழைத்தார். அப்போதும் அவன் சிறிதும் அசையவில்லை. பின்னர் அவ்வுதவி மருத்துவர் அவ்வூசியைப் பிடுங்கி அவனுடம்பின் பலவிடங்களினுங் குத்திக்குத்திப் பார்த்தார். அப்படிச் செய்தும் அவனுக்குச் சிறிதும் நோய் உண்டானதாகத் தெரியவில்லை. அவன் இவற்றை எள்ளளவும் உணராமல் நாற்காலி முதுகின் கூரான மேலோரத்தின்மேல் தன் கழுத்தை வைத்துக்கொண்டு நன்றாய் உறங்குவானானான்.

அதைப் பார்த்ததும், தம்மால் அறிதுயிலிற் செலுத்தப்பட்டு நினைவற்றுத் தூங்கும் அவனது துயிலின் இயல்பைக் கற்றார் சிலர்க்கு மெய்ப்பித்துக் காட்டும் பொருட்டு அத்துரைமகனார் தமது தொழிற்சாலைக்குப் போய் அறங்கூறுவோர் இருவரை அழைத்துவந்தார். அவர் திரும்பி வந்தபோதும், அவனை அவர் முன் விட்டுப் போன நிலைமையிலேயே அவன் இருந்தான். அவன் காதண்டை போய் எவ்வளவோ உரக்கக் கத்தியும் அவன் விழித்து எழுந்திலன். பின்பு நெருப்பைக் கொண்டுவந்து அவன் முழங்காலின்மேல் வைத்தார்கள், அதனையும் அவன் உணர்ந்திலன். அதன்பின், எடுக்கையிலேயே தங்கள் கண்களில் நீரை வருவித்த நவச்சாரத்தை அவர்கள் சிறிது நேரம் அவன் மூக்கிற் பிடித்தார்கள்; அதிலும் அவன்கண்ணிறைப்பைகூட அசையவில்லை. ஆனாற் சிறிதுநேரத்திற்குப்பின் அவன் சிறிது உணர்வுவரப் பெற்றுத் தலை அசைத்ததைக் கண்டவுடன், அம்மருத்துவர் ‘உனக்கு ஏதேனும் பருகுதற்கு வேண்டுமா?’ எனக் கேட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/319&oldid=1626551" இலிருந்து மீள்விக்கப்பட்டது