உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மறைபொருளியல் - 1 ❖
xxxi

கவலை இல்லாமை, நல்லெண்ணப் பொதிவு, பயிற்றுவார் பயில்வார் நிலை என்பவற்றைக் கூறுகிறார்.

சொல்லுக்கும் செயலுக்கும் மனம் முந்தியதாதலால் மன அமைதியை முதற்கண் கற்றுக் கொள்ள வேண்டும்; தீயவையாம் எண்ணம் இலாமைவேண்டும். எதனைச் செய்தாலும் மனத்தொடும் இயைந்ததையே செய்தல் வேண்டும். மனம் ஒருநிலைப்படச் செய்தல் வேண்டும். நடைப்பழக்க நலம், பழக்கத்தால் செய்யும் வேண்டாச் செயலின் கேடு என்பவற்றையும் அமைதியில் கூறுகிறார்.

நரம்புகளைத் தளர விடுதலே இளைப்பாறுதல்; அத்தகையனுக்கு நினைத்தவுடன் உறக்கம் எய்தும்; இறுகிய உடம்பும், கடுகிய உழைப்பும் அறிவு வளர்ச்சி விரும்புவார்க்கு வேண்டப்படுவன அல்ல என நரம்பு இளக்கத்தில் நவில்கிறார். நினைவை, முனைக்க நிறுத்த வல்லாரே எச் செயலையும் செவ்வையாகச் செய்து முடிக்க வல்லார். நினைவை முனைக்க நிறுத்த வல்லாரே பிறரைத் தம் வயப்படுத்தவும், நினைவாலேயே பிறரைச் செயல் புரிய வைப்பாராயும் விளங்குவர் என்பனவற்றைக் ‘கண்ணும் கருத்தும்’ என்பதில் என்பதில் விளக்குகிறார். அதுவே மக்களால் ‘மருள்’ எனப்படுகின்றது என்கிறார். தடவுதலாலும், கட்டுரைத்தலாலும் அறிதுயிலில் அமர்த்தக் கூடும் என்பதை விளக்கி, நினைவுத்துயில், நினைவற்ற துயில், நடைத்துயில் என்னும் மூவகைத் துயில்களைத் தக்க எடுத்துக் காட்டுகளுடன் விரித்துரைக்கிறார். தண்ணீர் மந்திரித்துக் கொடுக்கும் முறை மின்னாற்றல் உள்ளாரால் செய்யப்படுவது என்றும், தீய பழக்கங்களை ஒழிக்க அறிதுயில் பயன்படும் என்றும், அறிதுயிலில் ஆழ்த்தப்பட்டாரை விழிப்புறுத்தல் எவ்வாறு என்னும் நிலையைக் கூறி நூலை அடிகள் நிறைவிக்கிறார்.

மயக்க மருந்து செலுத்தாமல் மயங்க வைத்து நலப்பாடாக்கக் கண்ட கலை இஃது எனல் சாலும்! இதனைக் கையாள்வார் மிகத் தூயராக இருத்தல் கட்டாயமாக வேண்டும்.

- இளங்குமரன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/32&oldid=1628565" இலிருந்து மீள்விக்கப்பட்டது