உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
294

❖ மறைமலையம் - 3 ❖

போன எனது அரைப்பட்டிகையைக் கண்டெடுக்கும் படி செய்’ என்றார். அதன் மேல், அவ்வம்மையார் அத்தோழியை அங்கே வருவிக்க, அவள் எங்கே தன்மேற் குற்றஞ்சாட்டப் போகின்றார்களோ வென்று நடுக்கத்தோடும் வந்தாள். ஆனால், அந்த மாதரார், செய்யவேண்டுவது இன்னதென்று தெரிவித்துத், திருடன் இன்னானென்று கண்ட பின்னும் அவளை எவர்க்குங் காட்டிக் கொடாமல் தாமே எல்லாவற்றையும் அமைதியுற முடிப்பதாக உறுதி சொன்னார்.

அதன்பின், ஒரு கண்ணாடிக் குவளையில் தண்ணீரை நிரப்பி அதனைத் தமது இடது கைம்மேல் வைத்துக்கொண்டு, வலது கையால் அதன்மேல் பலமுறை தடவி அதில் உள்ள நீருக்குத் தனது உயிர்ப்பினை ஏற்றியபின், அதனை ஒரு மேசைமேல் வைத்து அத்தோழி அதனை உற்றுப் பார்த்து அங்கே தோன்றுவது இன்னதென்று சொல்லும்படி கற்பித்தார். அவள் அங்ஙனமே முகத்தைக் குனிந்து அதனை உற்றுநோக்குவாளானாள். சிறிது நேரம் ஆனதும் அம்மாதரார் அவளை நோக்கிப் ‘பெண்ணே! ஏதாவது காண்கின்றனையா?’ என்று கேட்க, ‘ஒன்றும் இல்லை’ என்று விடை கூறினாள். அதன்மேல் அவ்வம்மையார் அவள் தலையின்மேலும் கழுத்தின் பின்புறத்தும் புதிதாகத் தடவி அவளை இன்னும் ஆழ்ந்த துயிலிற் போகச்செய்து கேட்டும், அவள் ‘ஒன்றுமே தோன்றவில்லை’ என்றாள். அதனால், அவள் இத்தனை காலமாகத் தம்மை ஏமாற்றித் தான் வந்தனளோ என்று அவ்வம்மையார் முதலில் ஐயுறவு கொண்டார்.

திரும்பவும் அம்மாதரார்க்கு மற்றொன்று மனத்தில் தென்பட்டது. படவே, வேறொரு முறையால் அவளை முயன்று பார்க்கத் துவங்கினார். ‘பெண்ணே, கடைசியாக நம் தலைவர் அரைப்பட்டிகை அணிந்திருந்த நாளை உற்றுப் பார்’ என்று கற்பித்தார். அவள் சிறிது நேரம் சும்மா இருந்து, ‘நான் இப்போது நம் தலைவரைக் காண்கின்றேன்’ என்று கனவு மயக்கத்தோடு கூறினாள். திரும்பவும் ‘அவர் இப்போது உடை உடுத்துகிறார்; இப்போது படைக்கோலம் பூண்கின்றார்! இப்போது அரைப்பட்டிகை அணிகின்றார். ஆ! இப்போது அவர் அறையை விட்டுப் போகின்றார்’ என்றாள். உடனே அம்மாதரார் ‘விடாதே அவரைப் பின்றொடர்ந்து செல்’ என்று உறுதியாய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/327&oldid=1626559" இலிருந்து மீள்விக்கப்பட்டது