உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
313


இன்னும், இடது கையால் மின் சத்து ஏற்றப்பெற்ற தண்ணீர்க்கும், வலது கையால் மின்சத்து ஏற்றப்பெற்ற தண்ணீர்க்குங்கூட வேறுபாடு பெரிது காணப்படுகின்றது. இம் முறைகளில் நன்றாய்ப் பழகித் தேர்ச்சிபெற்ற ஒருவர் தம் இடது கையை ஒரு கிண்ணந் தண்ணீரின்மேற் கவிழ்த்துப் பிடித்த படியாய்த் தமது மின்னாற்றல் அதிற் பாய்வதாக ஓர் ஐந்து நிமிட நேரம் நினைத்திருக்க; பின்னர் வேறொரு கிண்ணந் தண்ணீரின் மேல் அங்ஙனமே தமது வலது கையைப் பிடித்தபடியாய் அவ்வளவு நேரமே நினைத்திருக்க. பிறகு, நுண்ணுணர்வு மிக்க ஒரு சிறுமி கையிற் கொடுத்து அவ்விரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுவைத்து அவற்றிற்குள்ள சுவை வேறுபாட்டைத் தெரிவிக்கும்படி கற்பித்தால், இடது கைவழியே மின்சத்தேறிய தண்ணீர் வெதுவெதுப்பாகவும் வெறுப்பான சுவையுடையதாகவும் இருக்கின்றதெனவும், வலதுகை வழியே அஃதேறிய தண்ணீர் இனிதாகவும் பளபளப்பாகவும் இருக்கின்றதெனவும் அவள் கூறுவள். இன்னும் பல கிண்ணந் தண்ணீர்களுக்கு இடையே இங்ஙனம் மின்சத்தேற்றிய கிண்ணம் ஒன்றனையுங் கலந்து வைத்து, அவை தம்மை ஒவ்வொன்றாய்ச் சுவைத்துப் பார்த்து, அவற்றின் சுவை வேறுபாடு தெரிவிக்கும்படி நோயாளி ஒருவர்க்கு மொழிந்தால், அவர் மின்சத்தேறிய நீரின்சுவை வ மற்றையவற்றின் வேறாயிருத்தலை நன்குணர்ந்து அதனைத் தெரிந்து சுட்டுவர்.

இனி, நீரில் மின்சத்து ஏற்றிக்கொடுத்து நோய்தீர்க்கும் முறையைப் பழகவேண்டுபவர் நோயற்ற தூய வுடம்பும் எல்லார்க்கும் நன்மை செய்ய விரும்புந் தூயவுள்ளமுங் கடவுளிடத்துக் கனிந்த அன்பும் உடையவராய் இருத்தல் இன்றியமையாத தாகும்.

அத்தகையோர் இளைப்புக் களைப்பின்றிக் கிளர்ச்சியோடு இருக்குங்காலங் காலைப்பொழுதே யாகையால், அந்நேரமே இம்முறையால் நோய் தீர்த்தற்கு ஏற்ற காலமாம். மிகவும் அயர்ச்சி யடையத்தக்க உழைப்பினை நாள் முழுதுஞ் செய்யாமலிருந்தால், எல்லாம் அமைதியுற்றிருக்கும் மாலைக் காலமும் இதனைச் செய்தற்கு ஏற்றதேயாகும். நோயாளி அமைதி கொண்டிருக்குங் காலமும் இதற்கு இசைந்ததென்றுணர்தல் வேண்டும். அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/346&oldid=1626565" இலிருந்து மீள்விக்கப்பட்டது