உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
316

❖ மறைமலையம் - 3 ❖

இப்போது யான் சொல்லியபடியே நீ எப்போதும நடக்கக் கடவாய்.’ என்று இக்கட்டுரைகளைத் திருப்பித் திருப்பி மெல்ல அழுத்தமாய்த் தீர்மானமான குரலிற் பலகாற் சொல்லுக; ஒருகாற் சொல்லியபின் சிறிது நேரம் சும்மா இருந்து பிறகு மற்றொருகாற் சொல்லுக. ஏனென்றால், அறிதுயிலில் நுண்ணிய வுடம்பின்கண் நிற்கும் அப்பையனுடைய அறிவில் அங்ஙனஞ் சொல்லியவை நன்றாய்ச் சென்று பதிதற்குச் சிறிது நேரம் வேண்டும். இம்முறை வழுவாமற் காலை மாலை இரண்டு வேளையும் ஒரு கிழமை வரையில் அவனை அறிதுயிலிற் செலுத்திக் கட்டுரை கூறி எழுப்பி வந்தால், அவன் தீய தன்மைகளெல்லாம் மாறி முற்றும் நல்ல பையனாய்க் கல்வியிலும் நடக்கையிலும் மற்ற எல்லா நல்வகைகளிலும் மேம்படுவான்.

இங்ஙனமே, புகையிலைச் சுருட்டுப் பிடிப்போனையும், கள், சாராயங் குடிப்போனையும், மூக்குப்பொடி யிடுவோனையும், இன்னும் பொய் சூது களவு உயிர்க்கொலை முதலாக ஆகாதன பல செய்வோனையும் மேற்சொல்லிய படியாகவே அறிதுயிலிற் போகச் செய்து, அத் தீய பழக்கங்களை விடும் படியாகக் கட்டுரை கூறித், திருத்தி, நல்வழிப்படுத்தலாம்.

இனி, நோய்களிற் சேராத ஒரு குறைபாடு சிலரிடங் காணப்படுகின்றது. அது ‘தெற்றுவாய்’ என்பதேயாம். ஒரு சொல்லைச் சொன்னபின் அதற்கடுத்த சொல்லைத் தொடர்ந்து சொல்லுதற்கு இடங்கொடாமல் வாய் மிகத் தெற்றுதலின், அக்குறைபாடுடையோர் அதனால் மிகத் துன்புறுகின்றனர். ஆகையால், அதனை நீக்குதற்குரிய ஒரு முறையை மட்டும் இங்கே விளக்கிக் காட்டுகின்றோம்.

தெற்றித் தெற்றிப் பேசுந் திக்குவாய் உடைய ஒருவரை வருவித்து, அவரை ஆழ்ந்த தூக்கத்திற் போகச்செய்க. அதன்பின் அவரைநோக்கி ‘நீர் எல்லாரும் பேசுவதைப் போற் செவ்வையாய்ப் பேசுவீர்; உமக்கு அதில் ஏதோர் இடைஞ்சலும் இராது; தங்குதடை இல்லாமல் உமக்குப் பேசவரும்; எப்போதும் நன்றாய்ப் பேசுவீர், நன்றாய்ப் படிப்பீர்; சொற்களைத் தொடர்பாக எளிதாகச் சொல்லுவீர், படிக்கும் போதும் சால்லுவீர், படிக்கும் ஒவ்வொன்றையுந் தொடர்பாக நன்றாய்ப் படிப்பீர்’ என்று பலமுறை திருப்பித் திருப்பி ஆழ்ந்த அழுத்தமான குரலில் விரையாமல் மெதுவாய்ச் சொல்லுக. இங்ஙனங் கட்டுரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/349&oldid=1626569" இலிருந்து மீள்விக்கப்பட்டது