உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
339

எண்ணெயோடு ஊறிய சுக்கான்கற் படையாயிருந்தது, அந்தச் சுக்கான்கல் எவ்வகையான நிலக்கரியையும்போல் நன்றாய் எரியும்; அதற்குங் கீழே நூறு அடிவரையில் சலவைக்கற்படை; அதற்குங்கீழே நூற்றிருபத்தைந்து அடிவரையிற் செம்புப் பொடியும் இரும்புப் பொடியுங் கலந்து சக்கிமுக்கிக் கல்லும் மணலும் ஒருங்கு திரண்ட படை; அதற்குங் கீழே நூற்றைம் பத்தாறு அடிகாறும் மண்ணெண்ணெய் கலந்து கொழுப்புப் போல் தடிப்பாயும் நுண்ணிய சுண்ணாம்பு போல் மெல்லிய தாயுமுள்ள வண்டல் மேலே வரப்பெற்ற கற்பாறைப்படை; அதனையடுத்து ஐந்நூற்று முப்பது அடிகாறும் ஈயங்கலந்த சுக்கான்கற்படை; பிறகு அறுநூற்று முப்பத்தொன்பதடி வரையில் கந்தகத்தோடு கலந்த இரும்பும் சக்கிமுக்கிக் கல்லும் உள்ள சுக்கான்கற்படை மிகவும் அழுத்தமாயிருந்தமையால் அதனைத் துருவிக்கொண்டு செல்லும் வேலை மெதுவாய் நடைபெற்றது. இந்தநேரத்தில் நிலத்தின் அடியிலுள்ள ஆவிகள் மேலெழும்புதலினால் ஒரு கொந்தளிப்பு அடிக்கடி உண்டாயிற்று; தண்ணீர் சடுதியில் முப்பது அடியிலிருந்து அறுபது அடி கீழேபோய்த் தமரூசியின் சிறுதுண்டுகளையும் பிறவற்றையும் எடுத்துக் கொண்டு மறுபடியுஞ் சடுதியில் மேலேவந்தது. இன்னுந், துளைக்கும் வேலை நடந்து கொண்டே போயிற்று; பின்னர் எழுநூற்றுப் பதினோரடி ஆழமுள்ள ஒரு மலைப்பாறையின் வளைவு முழுதுந் துளைக்கப் பட்டவுடனே, அடியில் நாலரை விரற்கடை அகலமுள்ள ஓர் உருவுதுளையிலிருந்து மிகக் குளிர்ந்த தண்ணீரானது பளிங்குபோற்றெளிவுடையதாய், வைரம்போற்றூயதாய், ஊன்கழிவு புற்பூண்டுகளின் கழிவு எதுவும் ஒருசிறிதுங் கலவாததாய்ப், பருகுதற்கும் உடம்பின் நலம் பேணுதற்கும் இதுவரையிற் கிடைத்த எந்தத் தண்ணீரினும் மிகச் சிறந்ததாய், இனி வருங்காலமெல்லாம் ஏழை மக்களுக்கு உற்றதொரு நட்பெனப் பயன்படுவதாய்ச் சடுதியில் மேற் கிளம்பிற்று.

“இதோ நம்பிக்கையற்றவர்களுக்குப் பென்னம் பெரிய தோர் உண்மையான செய்தி! கட்புலனாகாத ஒரு வினைமுதலால் வெளிக் கொணரப்பெற்று, எத்தகையோரானும் எதிர்மறுக்கக் கூடாத ஓர் உண்மை நிகழ்ச்சி! இயற்கைப்பொருணூல் Natural Science. தண்ணீர் கண்டெடுக்க முடியாதென்று கூறிற்று; ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/372&oldid=1626595" இலிருந்து மீள்விக்கப்பட்டது