உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64

❖ மறைமலையம் - 3 ❖

மந்திரவாதிகள் இவர்களுக்கு வேண்டிய மது மாமிசம் முதலியவற்றை உணவாகக் காட்டி விரும்பி அழைத்தால் அதற்கு இசைந்து இவர்கள் வராமல் இருப்பார்களா? அழைத்ததே போதுமென்று ஓடிவந்து அம்மந்திரவாதிகள் விரும்பியபடி தீய காரியங்களைச் செய்வர். பிறர்க்குத் தீங்கு செய்யும்படியான அவ்வளவு வலிவு அவர்களுக்கு எங்ஙனம் வந்ததெனின்; செல்லுமிடத்திலேதான் அவர்கட்கு வலிவு செல்லுமேயல்லாமல், மற்றவிடங்களில் அஃது உண்டாகா மாட்டாது. இறைச்சிகள் முதலியவற்றைப் புசித்துத் தீய நினைவும் தீய செய்கையும் உடையராயிருப்பவரிடத்திலும், அசுத்தமான இடங்களில் அசுத்தமாக வசிப்பவரிடத்திலும் அத் தீய பிசாசுகள் தொடர்ந்து சென்று துன்பஞ் செய்யுமே யல்லாமல் சுத்த உணவருந்திச் சுத்த நினைவு சுத்த செய்கையுடன் வாழ்வோரிடத்தில் அவை வருதற்குச் சிறிதும் துணிய மாட்டா; ஒருகால் ஏவிவிடும் மந்திரவாதியின் மந்திரபலத்தால் முன் செலுத்தப்பட்டு நல்லவரிடத்தில் வந்தாலும் அவற்றின் செயல் அங்குச் சிறிதும் பலியாமையினால் திரும்பிப் போய் ஏவிவிட்ட மந்திரவாதியையே துன்புறுத்தும். ஆகையால், நல்லவர்களுக்கு அவைகளால் எஞ்ஞான்றும் துன்பமுண்டாவதில்லை யென்க.

இன்னும் இவ்வுலகை விட்டு அகன்றவர்கள் திரும்பவும் இதனை நோக்கி வருவதற்குக் காரணம் இங்குள்ள பொருள்களின் மேல் அவர்கட்குள்ள பெரும்பற்றேயாகும். பணத்தின்மேல் அளவிறந்த ஆசைவைத்து இறந்தவர்கள், தாம் பணம் வைத்த இடத்தை வந்து வந்து சுற்றுவர். ஆங்கில மகா வித்துவானான ஸ்டெயிண்டன் மோஸஸ் என்பவர் வரவழைத்துப் பேசிய ஆவேசங்களில் ஒன்றின் சரித்திரத்தை இங்கே உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/97&oldid=1628623" இலிருந்து மீள்விக்கப்பட்டது