உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

7. அம்புலிப் பருவம்

அம்புலிப் பருவம் என்பது குழந்தையோடு சந்திரனை விளையாட வருமாறு அழைத்துப் பாடும் பருவமாகும். நடக்கக் கற்ற குழந்தை அங்கு மிங்கும் சென்று காட்சியின்பங்களைக் காண மிகுதியாக விரும்பும் நிலையில் குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் பாடப்பெறும் பருவமாகும். அம்புலி என்றால் நிலவு என்று பொருள்.

அம்புலியை அம் + புல்லி எனப் பிரிக்கலாம். புல்லி என்பது புல்லும் இயல்புடையது. ஏனைய நாள்களோடு (நட்சத்திரங்களோடு) புல்லும் சிறப்பு நோக்கிப் புல்லி என்பதன் இடைக்குறையே புலி. அழகுமிக்க தண்ணிய ஒளிக்கதிர்களைப் புல்லியுள்ளதால் அம்புலி என்று நிலவைக் கூறினும் பொருந்தும். நிலவில் உள்ள களங்கத்தை முயல் என்பர். புலி என்றும் கூறுவர். அகம் + கை அங்கை என்றானதுபோல அகத்தில் புலி உடையது அம்புலி என்றாயிற்று எனினும் ஆம். அம்புலிப் பருவமே கவிஞரின் திறனை அளக்கும் அளவுகோல். 'பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்' என்று இப் பருவத்தின் அருமைப் பாட்டை விளக்குவர்.

ஏனைய பருவங்களில் அழைக்கப்படும் பொருள் குழந்தையாயிருக்க இப்பருவத்தில் நிலவாயிருத்தலின், பிள்ளைத் தமிழ் நூல்கள் தோறும் நிலவு பற்றிய கற்பனைகளைப் ப் புதிதாயமைக்கக் கவிஞர் முயல்பது இயல்பாம். எனவே பிள்ளைத் தமிழில் மிகவும் நயம்பெற அமைவதற்குரிய பகுதி அம்புலிப் பருவமாம்.இப்பருவத்திலே சந்திரனைப் புகழ்ந்தும், பாட்டுடைத் தலைவனாகிய குழந்தைக்கும், சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை இயல்புகளையும், சந்திரனை விஞ்சிய உயர்வு சிறப்புக்களையும் எடுத்துரைத்தும் செய்யுள் அமைத்தல் வேண்டும். இதையே சாம பேத தான தண்டம் எனக் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/205&oldid=1595094" இலிருந்து மீள்விக்கப்பட்டது