உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

21

கொண்டு ஊசலை உதைந்தாடுதலும் ஆ! எவ்வளவு அருமை யான அழகுடன் விளங்குகின்றன! அவ்வோவியத்தை உற்றுப் பார்க்கப் பார்க்க உலக இயற்கையோடும் மக்கள் இயற்கை யோடும் பொருந்தச் சிறிதும் வழுவாமற் றீட்டிய அதன் சிறப்புகள் பார்ப்பவர் மனமெல்லாங் கவர்கின்றனவல்லவோ! கிடைத்தற் கரிய இவ்வோவியத்தை எழுதின இரவிவர்மர் அதனை வரைந்த போது தமது கருத்தை எவ்வளவு ஒன்றுபடுத்தி யிருந்தாராகல் வேண்டும்!

இனிப் புல்லாங்குழல் இசைப்பதில் திறமை வாய்ந்த ஒருவர் தாம் இசைக்கும் இசையிலும் பண்ணிலும் தமது மனத்தை ஒடுக்கிப் பாடும்போது, பட்டுப்போன மரங்களுந் தளிர்க்கும் நிலைமை யடைதலையும், பகுத்தறிவு குறைந்த சிற்றுயிர்களும் அவ்விசையின் வயப்பட்டு அறிவு மயங்கி யிருத்தலையுங், கன்னெஞ்சம் உடைய மக்களும் மனம் உருகிப் பேரின்ப வழிப்பட்டவராய்க் கற்போல் அசையா திருத்தலையும் நீங்கள் கண்டதில்லையா? இவ்வளவுஞ் செய்தது யார்? என்று சிறிது நீங்கள் உற்று ஆராய்வீர்களாயின், பாடினவரின் கருத்தொருமையே அவ்வளவுஞ் செய்த தென்பதனை எளிதில் அறிவீர்கள். எதற்கும் வயப்படாதவர்கள் இசைக்கு வயப்படுவர் என்பது அறிவுடையோர் உறுதிமொழி. எதற்குங் கட்டுப்படாத கொடிய நச்சுப்பாம்பானது பாம்பாட்டியின் குழலோசைக்கு வசப்பட்டுத் தன் தீய இயற்கையினையும் மறந்திருக்கின்றதன்றோ? தாய் எப்படிச் சீராட்டினாலும் அழுகை அடங்காத குழந்தையானது, அவள் தனது இனிய குரலைத் திறந்து பாடினவுடன் அழுகை தீர்ந்து நன்றாக உறங்குகின்றதன்றோ? கடவுளும் இசையிலே உவப்படைந்து அன்பர்களுக்கு அருள் செய்கின்றார் என்பதனை உணர்ந்தன்றோ மாணிக்கவாசகர் முதலான சமயாசிரியப் பெரியோர்களும் அருந்தமிழ்ப் பாட்டுகளினாலே இறைவனைப் பாடிப் பரவினார்கள். மனம் எவ்வளவுக்கு அடங்கி உறைத்து நிற்கின்றதோ, அவ்வளவுக்குப் பாட்டும் பாட்டின் இசையும் பேரின்பத்தைத் தருவன வாயிருக்கும். நினைவின் உறைப்பினாலே பாடப்படுகின்ற பாட்டைக் கேட்போரது மனமும் ஒன்றுபட்டு ஒருவழியிலே நிற்கும். உலக வாழ்க்கையிலே ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவர் உள்ளமுங் கற்பாறைமேல் விழுந்த மழை பல சிறு திவலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/54&oldid=1576006" இலிருந்து மீள்விக்கப்பட்டது