உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

2. நுண்ணிய வெளிகள்

இங்ஙனந் தொலைவிலுள்ள ஒருவர் நினைவானது மற்றொருவர் உள்ளத்தில் எழுவதற்கு ஏது என்னை? வேறு வேறு இடங்களில் உள்ள இருவரையும் ஒன்று படுத்தி இணைக்க நடுவே எவ்வகைப் பொருளும் இல்லாதிருக்கவும், அவ்விருவர்க்கும் ஒரே நினைவு தோன்றுவதெப்படி என்று பலருந் தம்முள் ஐயுற்று மருள்வர். உள் பொருள்களைப் பகுத்தறியும் நுண்ணுணர்வுங் கல்வியும் இல்லாதவர்கள் மட்டுமே இங்ஙனம் மருள்வர்; இத்தன்மையோர்க்குக் கண்ணாற் காண்பதுங் காதாற்கேட்பதும் மட்டுமே மெய்; ஏனையவெல்லாம் பொய். கல்வியும் நுண்ணுணர்வும் உடையாரோ, வளிப் பார்வைக்கு உடம்பினுள் வாழும் உயிர்கள் தனித்திருப்பதுபோற்றோற்றினுந், தம்மைச் சுற்றிலும் அவை பலவகையான நுண்ணிய பொருள் களாற் சூழப்பட்டிருத்தலைத் தெள்ளிதில் அறிந்துகொள்வர். நுண்பொருள் நோக்கி என்னுங் கண்ணாடியின் உதவியால் நாம் உயிர்க்கும் மூச்சிலும் அருந்துந் தண்ணீரிலும் இயங்கும் இடைவெளியிலும் எண்ணிறந்த உயிர்கள் மிக நுண்ணிய சிற்றுடம்புகளில் உலவுதலை அறிவுடையோர் உணர்ந்து வருகின்றார்கள். நம்முடைய கண்களுள் வந்து நுழைந்து கண்ணொளியை விளக்குங் கதிரவன் முதலிய பொருள்களின் ஒளியும், புறப்பொருள்களிற் பிறந்து காதினுள் வந்து நுழையும் ஓசையும் எவ்வாறு வருகின்றன என்பதனைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்த இயற்கைப் பொருணூற் புலவர்கள், அவை அங்ஙனம் பரந்து உலாவி வருவதற்கு எங்கும் நிறைந்த மிக நுண்ணிய இடைவெளி ஒன்று உண்டென்று கண்டறிந்தார்கள். ஒளியானது ஒர் இமைப்பொழுதில் ஓர் இலக்கத்து எண்பத் தாறாயிரம் மைல் இடத்தைக் கடந்து செல்கின்ற தென்பதைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் இனிது விளக்கினாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/46&oldid=1576486" இலிருந்து மீள்விக்கப்பட்டது