உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் - 9

ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனத் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிறவேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இட இடமெல்லாம் பல வண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச்சீலைகள் போலவும் வெளியே முகில்களெல்லாம் பொற்பட்டுத் துகில் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியொடு திகழவும் உலகமங்கை நகைத்தாற்போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல் வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ்விடியற்கால அழகினைக் கண்டு வியந்த வண்ணமாய் மீன்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆன்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத், தாம் மரநிழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள்பிணையத் தழுவிக் கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தோறுந், தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளிலிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந் தொழுகும் அருவிநீர் கூழாங்கற் படையின் மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச் சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின் மேல் இதழ்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/51&oldid=1578898" இலிருந்து மீள்விக்கப்பட்டது