உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

33

தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூயநிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிரமாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலுமேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின. மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங்கருத்துக்களிற்றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சு தேயத்திற் றோன்றியதை யொத்த ஒரு பெரிய மாறுதல் எங்கும் உண்டாவ தாயிற்று. இங்ஙனம் ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்றுவரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரிய பெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரியமுயற்சியில் தலை நின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்குமுன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ்மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரணமாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை, ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க் குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/66&oldid=1578913" இலிருந்து மீள்விக்கப்பட்டது