பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


வியப்பு, மகிழ்ச்சி, அச்சம், துன்பம், கோபம், இரக்கம் முதலிய உணர்ச்சிகளைக் காட்டும் சொற்களின் பின் ஆச்சரியக்குறி இட வேண்டும்.

கேள்விக் குறி :-

அவன் எங்கே போனான்? செய்தது யார்? இவற்றில் 'எங்கே' 'யார்' என்ற சொற்கள் நின்று கேள்விப் பொருளை உணர்த்தின. ஆகவே கேள்விக்குறி வைக்கப்பட்டது.

"வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியங்களின் முடிவில் கேள்விக்குறி இடவேண்டும்.”

மேற்கோள் குறி:

நான் வேலனிடம் "நீ நெல்லை வருகிறாயா?” எனக் கேட்டேன்-இவ்வாறு வரும் நேர் கூற்றில் மேற்கோள் குறி இட வேண்டும்.

"செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்று அதிவீரராமர் கூறுகிறார். இவ்வாறு பிறர் கூற்றைச் சொல்லுமிடத்தும் மேற்கோள் குறி இட வேண்டும்.

"முருங்கை பருத்தால் தூண் ஆகாது” இவ்வாறு பழமொழியைக் கூறுமிடத்தும் மேற்கோள் குறி இடவேண்டும்.

"நேர் கூற்றும், பிறர் கூற்றும், பழமொழியும் மேற்கோள் குறி பெறும்.”