பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


மகளிர், விறலியர் - இப்பெயர்ச் சொற்களில் ஒவ்வொன்றும் பல பெண்களைக் குறிக்கின்றது. ஆகவே இவை பலர் பால்.

அரசரும் புலவரும் கண்டனர். அவர்கள் மகிழ்ந்தனர். இதில் அவர்கள் என்பது ஆண்களில் பலரை உணர்த்திற்று. ஆகவே இது பலர் பால்.

ஒளவையும் அம்மையும் சென்றனர். அவர்கள் வேலனைக் கண்டனர். இதில் அவர்கள் என்பது பெண்களில் பலரை உணர்த்திற்று. ஆகவே இதுவும் பலர் பால்.

கந்தன் பாட ஒளவை ஆடினாள் . அவர்கள் இருவரும் நன்கு நடித்தனர். இதில் 'அவர்கள்' என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்த பலரை உணர்த்திற்று. ஆகையினால் இதுவும் பலர் பாலே.

"ஆண்களில் பலரையும், பெண்களில் பலரையும், ஆண் பெண்களில் பலரையும் உணர்த்துவதே பலர் பாலாம்.'

"ஆண்பால், பெண்பால் பலர் பால் என்ற மூன்றும் உயர்திணைக்கு உரியனவாம்."