பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

காயங்களிலுள்ள பாக்டீரியா என்ற கிருமிகளை ஆராய்ச்சி செய்து அவற்றை அடியோடு அழித்த விவரம் அவரது ஆராய்ச்சியிலே வெளியிடப்பட்டிருந்ததை லிஸ்டர் படித்தார்.

அந்த லூயி பாஸ்டர் சிகிச்சை முறை லிஸ்டர் ஆராய்ச்சிக்கும் பயன்பட்டது. என்ன அது?

நோயாளிக்கு அறுவை சிகிச்சைச் செய்த பிறகு, காற்றினாலும், வேறு சில பொருட்களாலும் கிருமிகள் காயத்தில் படுகின்றன. அந்த நச்சுக்கிருமிகள் நோயாளியின் காயங்கள் மூலமாக உடலில் செல்கின்றன. உடலில் சென்ற கிருமிகள் விஷமாக மாறுவதால் நோயாளி இறக்கின்றான். அதனால்தான் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், நோயாளி விஷக் கிருமிகளுக்குப் பலியாகி இறக்கின்றான் என்பதை லிஸ்டர் கண்டுணர்ந்தார்.

ஜோசப் லிஸ்டர், லூயி பாஸ்டர் முறையிலிருந்து வேறு ஒரு புதிய முறையில் ஆராய்ச்சி செய்தார்.

அதாவது நோயாளியின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, காயத்தைக் கார்பாலிக் ஆசிட்டால் நனைக்கப்பட்ட துணியால் கட்டினால், காயத்திலே படிந்துவிட்ட கிருமிகள் செத்து விடும்.

வெளியிலே உள்ள கிருமிகள் காயத்தின் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும் என்பதுதான் ஜோசப் லிஸ்டர் கண்ட புதிய ஆய்வு முறை. இந்த சிகிச்சை முறையை லிஸ்டர் தனது நோயாளிகளுக்குச் செய்து பார்த்தார். வெற்றியும் கண்டார்! நோயாளிகள் சாவும் குறைந்தது. இந்த லிஸ்டர் முறைக்கு ஆண்டிசெப்டிக் சர்ஜரி என்று பெயரிட்டப்பட்டு, உலகமெங்கும் பரவியதால், லட்சக்கணக்கான நோயாளிகளது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த மருத்துவ வெற்றிக்குப் பிறகு லிஸ்டர், 1887-ஆம் ஆண்டில் எடின்பர்க் மருத்துவப் பேராசிரியரானார்.

இங்கிலாந்து ராணியும், மன்னர் ஏழாம் எட்வர்டும் 1903-ஆம் ஆண்டில் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கினார்கள். இத்தகைய ஒரு மருத்துவ மாமேதை, "ஆண்டிசெப்டிக் சர்ஜரி என்ற புதிய அறுவை சிகிச்சை மூலம் இலட்சக் கணக்கான உலக நோயாளிகளது உயிரைக் காப்பாற்றிய மருத்துவ விஞ்ஞானி; இங்கிலாந்து நாட்டில் அப்போடன் நகரில் 1827-ஆம் ஆண்டில் பிறந்த அவர், 1912-ஆம் ஆண்டில் 85-வது வயது வரை வாழ்ந்து மறைந்து உலகப் புகழ் பெற்றார்!

மாணவ மணிகளே! நீங்களும் உங்களிடம் உள்ள அரிய திறமைகளைப் பயன்படுத்தி உலகப் புகழைப் பெறுவீர்களா?