பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

51. விவசாயிக்குக் கிடைத்த பரிசு

ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான வயலில் கூலிக்காக விவசாயி ஒருவன் வேலை செய்து வந்தான்.

ஒரு நாள் விவசாயி அந்த வயலில் ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான். அதைப் பார்த்ததும் அவன் மனைவி மிகவும் ஆவலோடு தனக்குக் காதோலை செய்துதரும்படி கேட்டாள்.

அதை அறிந்த விவசாயி, இந்த வயல் ஜமீன்தாருக்குச் சொந்தமானது. எனவே அதில் கிடைக்கும் பொருள் அவருக்கு உரிமையானது ஆகும். அதை நாம் வைத்துக்கொள்வது தவறாகும் என்றான். அவன் கூற்று அவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை. “ஜமீன்தாரா வந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வாறு தெரியப் போகிறது?” என்று கேட்டாள் மனைவி.

“அவர் வந்து பார்க்கவில்லைதான். ஆனாலும் நம்முடைய மனம் பார்த்துக் கொண்டிருக்கிறதே” என்று கூறிவிட்டு மோதிரத்தைக் கொண்டு போய் ஜமீன்தாரிடம் கொடுத்தான் விவசாயி.

ஜமீன்தார் மிகவும் ஆச்சரியத்தோடு “அந்த மோதிரத்தை நீயே வைத்துக் கொண்டிருக்கலாமே! எனக்கு எப்படி தெரியப்போகிறது?” என்று கூறி அவனுடைய நேர்மையைப் பாராட்டி பரிசு அளித்தார்.