பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 229



ஆடை உடுத்தல், சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித் தோலை ஆடையாகவும் கொண்டுள்ளமை, அயன் அநங்கன் முதலியோரை ஒறுத்தமை, அயனும் மாலும் அடிமுடி காணாத வண்ணம் அழலாய் நிமிர்ந்து தோன்றினமை கங்கையைச் சடையில் கரந்தமை, ஆலகால நஞ்சை உண்டமை, மாதொருபாகன் ஆகினமை, தசையொழிந்த உடலின் முழு எலும்பாகிய கங்காளம் தரித்தமை, அம்பலத்தே கூத்தாடி அமுது செய்யப் பிச்சையேற்றுத் திரிந்தமை முதலிய திருவருட் செயல்களைப் பற்றிய விளக்கங்கள் இப்பனுவலில் இடம் பெற்றுள்ளன.


இப்பனுவலின் இரண்டு பாடல்களையும் அவற்றிலடங்கி யுள்ள திருவருட் செயல்கைளயும் விளக்குவேன்.

  பூசுவதும் வெண்ணிறு
     பூண்பதுவும் பொங்கரவம் 
  பேசுவதும் திருவாயான்
     மறைபோலும் காணேடி 
  பூசுவதும் பேசுவதும்
     பூண்பதுவும் கொண்டென்னை 
  ஈசனவன் எவ்வுயிர்க்கும்
     இயல்பானான் சாழலோ (1) 

(பொங்கு அரவம் - சீறுகின்ற பாம்பு; மறை - இரகசியம்; வேதம்)

என்பது இப்பனுவலின் முதற் பாடல். இதன் முதல் இரண்டடிகள் ஒருத்தியின் வினாவாகவும் ஈற்று இரண்டடிகள் அதற்கு மற்றொருத்தியின் விடையாகவும் அமைந் துள்ளன.

ஒருத்தி : பூசுவது வெண்ணிறு. அணிவது சீறுகின்ற பாம்பு. பேசுவது வேதம். தெய்வம் என்னும் ஒரு பொருளுக்கு இவையெல்லாம் பொருந்துமா?