பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கன்னித்தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகத்திற்குக் குழப்பம் மிகுந்த காலம். எனவே, இக்காலத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் சிக்கலும் குழப்பமும் நிறைந்ததாக இருப்பதில் வியப்பில்லை. தமிழகம் என்ற வளமான அரண்மனைக்குத் தீவைத்ததோடு அவ்வரண்மனைச் சொத்தை எல்லாம் இரவு பகலாகச் சூறையாடியக் கள்வர்களைப் பற்றிய ஆராய்ச்சியாகவே இக்காலம் அமைந்து கிடக்கிறது. இன்பத் தமிழகத்தை ஏகாதிபத்திய வெறிகொண்டு வேட்டையாட நினைத்தான் மொகலாயப் பேரரசன் ஒளரங்கசீபு. அவன் தக்காணத்தில் பிஜப்பூரையும் கோல் கொண்டாவையும் கைப்பற்றிய பின், 1893ல் தென் திசை நோக்கிப் படையெடுக்கும் பொருட்டுச் சுல்பிகர் கானை அனுப்பி வைத்தான். அப்போது மதுரையை ஆண்டவள் நாயக்க வமிசத்தைச் சேர்ந்த இராணி மங்கம்மாள், நுண்ணறிவு படைத்த மங்கம்மாள், பலம் பொருந்திய இஸ்லாமியப் பேரரசை எதிர்த்துத் தோல்வியுறுவதைவிடப் பணிந்து வாழ்வதே ராஜ தந்திரமென்று கருதினாள்; எனவே, ஏராளமான பரிசுகள் பலவற்றை மொகலாயப் பேரரசின் தளபதிகட்குக் காணிக்கையாகக் கொடுத்துக் காரியங்களைச் சாதித்துக் கொண்டாள்; தன்னை அழிக்க வந்த இஸ்லாமியப் படையையே தன் எதிரிகளை அழிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டாள். ஆம். கடும்புயலை எதிர்த்து அரசாங்கக் கப்பலை நடத்திப் பாழாக்காமல், பக்குவமாகத் தப்பித்துக் கொண்டாள் மங்கம்மாள். இஸ்லாமியப் பேரரசிற்கு இணங்கிப்போவதனால் தமிழகத்தின் குறுநில மன்னர்களின் காட்சியில் தன் புகழ் குன்றாதிருக்கும் என அவள் நம்பினாள். ஒளரங்கசீபுவின் ஆசையெல்லாம் தமிழ் நாட்டு அரசுகளின் சொத்தை முதலில் சூறையாடுவது; அடுத்து நிலப் பகுதிகளைக் கொள்ளை கொள்வது: மூன்றாவதாக அவ்வரசுகளின் உயிரையே குடித்து ஆனந்தப்படுவது. இத்தகைய ஒரு கொடுமைக்கு - ஒளரங்கசீபுவின் ஆசைக்கு - தமிழகம் இரையாகாமல் காப்பாற்றியவள் மங்கம்மாள். தன் பணிவாலும் நயமொழிகளாலும் ஒளரங்கசீபுவிடமிருந்து ஒருவாறு மங்கம்மாள் தப்பினாலும், தமிழகத்திற்குள்ளே தானே ஏற்படுத்திக் கொண்ட பகைகளாலும் தன்மேல் பிறர் கொண்ட பகைகளாலும் பெருந்தொல்லைகட்கு உள்ளானாள். உண்மையில் அவள் காலத்திலேயே நாயக்கர் அரசு ஆட்டம் கண்டுவிட்டது.