பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 122 இழுத்தார்கள் உந்தினார்கள் உரக்கக் கூவினார்கள். ஒன்றும் பயனில்லை. தேர் ஒர் அலங்குலங்கூட நகர வில்லை. எல்லோருக்கும் ஒரே வியப்பு திகில் காரணம் எவருக்கும் புரியவில்லை. மருதரசர் கண்கள் குப்பமுத்து ஆசாரியைக் கூர்ந்து பார்த்தன. என்ன சேதி? என்றார் பெரிய மருது. ‘அரசே என்றான் ஆசாரி. அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. மருதரசர் திருமுகத்தையும் தேர்மீது செம்மாந்து வீற்றிருக்கும் ஆண்டவன் அருள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான் தாழ்ந்த குரலில் பேசினான்; அரசே, கவலை வேண்டா. தேர் தாராளமாக ஒடும். அது இறைவன் திருவுள்ளம் போலும் என்றான். நான் என்ன செய்யவேண்டும்?' என்றார் நாட்டின் வேந்தர் பரபரப்புடன். "ஒன்றுமில்லை அரசே என் மீது சினங்கொள்ளாது செவி சாய்க்க வேண்டும். உங்கள் கை மோதிரத்தையும் செங்கோலையும் இந்த ஏழையின் கையில் கொடுத்துவிட வேண்டும். தேர் நிலைக்கு வரும்வரை இந்தப் பாடு படும் தொழிலாளியே சீமையின் அரசன், என்று உங்கள் திருவாயாலேயே அறிவிக்க வேண்டும்." என்றான் ஆசாரி. ஒரு கணம் திகைத்துப் போனார் வெள்ளை மருது. சுற்றி இருந்தவர்கட்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. ஆனால், மருதரசரோ, அடுத்த கனத்திலேயே புன்முறுவலோடு இதோ பிடியும் ஆசாரியாரே செங்கோலையும் மோதிரத்தையும் நீயே சிவகங்கைச் சீமையின் ராஜா, என்றார். உடனே ஆசாரி இறைவனை வணங்கிவிட்டுப் பெரிய மருதுவைப் பார்த்து, 'ஐயா, இறங்குங்கள் கீழே, தேர் வடத்தைப் பிடித்து, பத்தியோடு இழுங்கள். உம் நடக்கட்டும்' என்றான். அடுத்த வினாடி மருதரசரும் அவரைச் சூழ்ந்து தேர்மேல் நின்ற பெரிய மனிதர் அனைவரும் கீழே இறங்கினர். அவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கினான் சிவகங்கைச் சீமையின் புதிய அரசன் குப்பமுத்தாசாரி. காளீஸ்வரா என்று விண்ணதிரக் கூறிக்கொண்டே அனைவரும் தேரிழுக்கலாயினர். தேரோடியது-தட்டாமல் தயங்காமல் ஓடியது. நிலம் நெளியக் காளையார் கோவில் தெப்பக் குளத்தில் நீர்க்குமிழிகள் கணக்கின்றி அரும்பத்தேர் கனஜோராய் ஓடியது. ஆம்! பாட்டாளியைப் பார்வேந்தனாக்கிப் பார்வேந்தர் தம்மைப் பாட்டாளியாக்கிக் கொண்டு கடமையைச் செய்த இந்நிகழ்ச்சியை இன்றும் பாண்டி நாட்டு மக்கள் கதையாகக் கூறிக் களிப்பெய்துகின்றார்கள். அன்று நடந்த இந்த நிகழ்ச்சி - பதவியினும் பணியே பெரிது என்று மதித்த பார்த்திபரின் கதை-அழகான ஒரு நாட்டுப் பாடலால் அழியா வரம் பெற்று விளங்குகிறது. 'மருதுவந் தாலும்தே ரோடாது - அவன் மச்சினன் வந்தாலும் ஓடாது; தேருக் குடையவன் குப்பமுத் தாசாரி தேர்வடம் தொட்டாலே தேரோடும்.'