பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 பேராசிரியர் ந.சஞ்சீவி "புதுக்கோட்டைத் தொண்டைமானுக்குப் பாஞ்சாலங்குறிச்சித் தலைவன் என்றால் சிம்ம சொப்பனமாய் இருந்தது. வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கு மேடைக்கு அனுப்பவும் அவன் தம்பியைச் சிறையில் வைக்கவும் காரணமாய் இருந்தவன் அல்லவா அவன் ஊமைத்துரையின் உள்ளங் கவர்ந்த சிவகங்கைச் சகோதரர்களாகிய மருதுபாண்டியவர்கள் அடிக்கடி தொண்டைமானை அச்சுறுத்தி வந்தார்கள்; தங்களோடு முழுமனத்தோடும் முழுப்பலத்தோடும் ஒன்று சேர்ந்து வெள்ளையரை எதிர்க்காவிடில் பலவகையாலும் நாசம் விளைவிப்பதாகப் பயமுறுத்தி வந்தார்கள்; தங்களோடு ஒத்துழைக்க விருப்பமில்லை எனின், வெள்ளையருக்கு எவ்வித உதவியும் எப்பொழுதும் செய்யாமல் நடுவு நிலைமையாவது வகிக்க வேண்டும் என்று நாளும் வற்புறுத்தினார்கள். ஆங்கிலப் படைகட்குத் தொண்டைமான் பொருள் வகையாலும் படைவகையாலும் எவ்வித உதவியும் செய்யக் கூடாது என்பதும் அவன் தன் நாட்டின் வழியாக வெள்ளைப் படைகளை நடமாடவிடக் கூடாது என்பதுமே சிவகங்கைச் சசோதரர்களின் விருப்பம். தங்கள் விருப்பத்தைத் தொண்டைமான் நிறைவேற்றவில்லை என்றால் புதுக்கோட்டைச் சீமையிலுள்ள ஒவ்வொரு வீடும் தீக்கு இரையாகும் என்றும் அவர்கள் மிரட்டினார்கள். '1801 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள், 11 ஆம் தேதி நான் தொண்டைமானைக் கண்டு பேசினேன்; அவனுடைய பரிபூரண ஒத்துழைப்பை வேண்டினேன். அச்சமயத்தில் அவன் மருது பாண்டியரின் பயமுறுத்தல்களால் நடுங்கிக் கிடந்தான். எப்படியும் மருதுபாண்டியர்கள் தனக்கு நாசம் விளைவிக்கக் கூடும் என்று அவன் திடமாக நம்பினான்; ‘கர்னல் அக்கினியூவின் படைகளாலேயே மருதுபாண்டியர்க்குப் பதில் சொல்ல முடியாத போது நாம் எம்மாத்திரம்' என்று அஞ்சினான். 'தொண்டைமான் பத்தே நாள்களில் தன் குலத்து மங்கை ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்வதற்கு அச்சமயத்தில் திட்டமிட்டிருந்தான். எனவே, திருமணத்தைக் காரணம் காட்டிப் படையுதவி அனுப்புவதற்குச் சற்றுத் தாமதமாகுமென்று என்னிடம் மன்றாடினான். நான் மறுத்தேன்; அவன் பணிந்தான் தன் திருமண ஏற்பாடுகளை உடனே நிறுத்தினான் போருக்கான ஏற்பாடுகளைச் சடுதியில் தொடங்கினான்; என் வேண்டுகோளின்மேல் இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்தான்; ஆனால், படை சேர்க்கும் பணியையும் கருத்தாகச் செய்தான். நான்கே நாள்களில் மூவாயிரம் வீரர்களடங்கிய படை கர்னல் இன்ஸின் தலைமையில் சிவகங்கை நோக்கிச் சென்றது. "நான் சொன்னவுடனே தொண்டைமான் தன் பலம் பொருந்திய ஒரே கோட்டையாகிய திருமயத்தை அக்கினியூவின் உபயோகத்திற்காக அர்ப்பணஞ் செய்தான்.