பக்கம்:மாபாரதம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

மாபாரதம்

சென்று விட்டனன். கதிரவன் மைந்தனாகிய கன்னன் வெற்றி அடையப் போவதில்லை. ‘தக்க சமயத்தில் உன் வில் வித்தை பயன்படாமல் போகக்கடவது” என்று கன்ன னுக்குப் பரசுராமன் சாபம் இட்டிருக்கிறான். போரில் தேர் பூமியில் அழுந்தக்கடவது” என்று ஒரு முனிவன் சாப மிட்டிருக்கிறான். கவசகுண்டலங்களை இந்திரனுக்குத் தானமாகத் தந்து விட்டான். நாகக் கணையை இரண் டாம் முறை ஏவுவதில்லை என்றும், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைக் கொல்வதில்லை என்றும் குந்தி யிடம் உறுதி தந்திருக்கிறான். அதனால் அவன் போரில் மடிவது உறுதி” என்று கூறினான் கண்ணன். மேலும் அசுவத்தாமன் துரியனிடமிருந்து பிரிக்கப்பட்டான்; அதனால் அவன் படைத்தலைமை ஏற்கப் போவதில்லை. போரில் முழுவதும் ஈடுபடப் போவதில்லை. அதனால் பாண்டவர் தமக்கே வெற்றி உறுதி என்று நம்பிக்கை ஊட்டினான்.

வீடுமன் இல்லாத துரியோதனனின் சேனை சந்திரன் இல்லாத வானத்தையும், நறுமணம் இல்லாத மலரையும், நதி நீர் இல்லாத நாட்டையும், நரம்பு இல்லாத யாழை யும், தூய சிந்தனைகள் தோன்றாத மனத்தையும், வேத விதியோடு பொருந்தாத யாகத்தையும் போன்று வெறுமை உற்றது.

வழக்கம் போல் போர் தொடங்கியது. சகாதேவனும் சகுனியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது. இவ்வாறே துரியனும் வீமனும், சல்லியனும் நகுலனும், கன்னனும் விராடனும், துருபதனும் பகதத்தனும், சிகண்டியும் கலிங்க நாட்டு அரசன் சோமதத்தனும் ஒருவரை ஒருவா தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/221&oldid=1048253" இலிருந்து மீள்விக்கப்பட்டது