பக்கம்:மாபாரதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

83


அவனை இழுத்துக் கொண்டு சென்று ஏற்கனவே இவனைப் போலச் செருக்குற்றுப் பதவி இழந்த நான்கு இந்திரர்கள் அங்கே பாதாள அறையில் அடைபட்டிருப்பதைக் காட்டினான். அவர்கள் ஐவருமாகச் சிவன் காலடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்; “நீவிர் ஐவீரும் மண்ணுலகில் பிறந்து இந்தப் பெண்ணுக்குக் கணவர் ஆவீராக” என்று கட்டளை இட அவர்கள் ஐவரும் பாண்டவராகப் பிறந்துள்ளனர்” என்று கூறினான் .

யமனுக்குப் பிறந்த தருமனும், வாயுவுக்குப் பிறந்த வீமனும், அசுவனி தேவர்களுக்குப் பிறந்த நகுல சகா தேவர்களும் பிலத்தில் அடைபட்டிருந்த இந்திரர் நால்வர் எனவும், இந்திரனுக்குப் பிறந்த அருச்சுனன் இந்த ஐந்தாவது இந்திரனின் பிறப்பு என்றும் கூறினான்.

இந்திரப்பதவி என்பது மாறி மாறி வரும் என்று கூறப்பட்டது. சிவனால் பதவி இறக்கப்பட்ட ஐந்து இந்திரர்களே மானுடப்பிறவி எடுத்து இந்திரசேனையை இங்கு மணக்கின்றனர் என்று வியாசன் கூறினான்.

இந்தக் கதைப்பின்புலம் பாண்டவர்கள் ஒரு சேர எடுத்த முடிவுக்கு அரண் செய்தது. “கட்டிக் கொள்கிறவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மனைவியாகப் போகும் காரிகையும் மறுப்புச் சொல்லவில்லை. அவளை வைத்து வழி நடத்தும் மாமியும் ஏற்கிறார். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்இல்லை” என்று துருபதன் அம் மணத்துக்கு இசைவு தந்தான்.

மணவிழா

மணவிழா சிறப்பாக நடைபெற்றது. வேதம் கற்ற வேதியரும், முடிவேந்தரும் திரண்டுஇருக்க மணித்துரண்கள் நிறைந்த மண்டபத்துக்குப் பாண்டவர் வந்து சேர்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/86&oldid=1048326" இலிருந்து மீள்விக்கப்பட்டது