பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"குருக்களையா, இந்தக் கேட்டையெல்லாம் தவிர்ப்பதற்கு வழி என்ன? என் மகள் இந்தக் கொடிய தூக்கத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு பணம் செலவானாலும் சரி. நல்லவழியைச் சொல்லுங்கள்" என்றான் அரசன்.

"அரசர்க்கரசே, இந்த மந்திரவாதியை வெல்லக் கூடிய ஆற்றல் வேறு எந்த மந்திரவாதிக்கும் இல்லை. அவனைக் கொல்வதற்கு என்னாலும் முடியாது; என்னைப்போன்ற எவராலும் முடியாது. மந்திரவாதியைக் கொன்றால் தான் இளவரசியை எழுப்பமுடியும். அவனைக் கொல்வதற்கு ஓர் இளைஞன்வேண்டும். அந்த இளைஞன், அஞ்சாத நெஞ்சம் படைத்தவனாகவும், மாய மந்திரங்களைக் கண்டு மனங் கலங்காதவனாகவும், தெய்வ நம்பிக்கை யுடைய வனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் இளைஞன் தான் மந்திரவாதியைக் கொல்ல முடியும்" என்றார் குருக்கள்.

"குருக்களையா, அப்படிப்பட்ட ஓர் இளைஞனைக் கொண்டு வாருங்கள். அவன் அந்த மந்திரவாதியைக் கொன்று என் மகளை உறக்கத்தினின்று எழுப்பி விட்டால், எவ்வளவு பணம் வேண்டுமானலும் கொடுக்கிறேன்" என்றார் மாமன்னர்.

24