பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருபத்தெட்டுத் தேசங்களைப் பரிசு கொடுப்பதைத் தவிர வேறு வழி எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை, இளவரசியை அரண்மனையில் ஓர் அறையில் படுக்க வைத்திருங்கள். அந்த அரண்மனையில் இளவரசியிடம் அன்புள்ள ஒரு பெண்மணியைக் காவல் இருக்கும்படி செய்யுங்கள். பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினார் குருக்கள்.

குருக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அரசர் பிரான் தம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.

இளவரசி செந்தாமரையை ஓர் அழகிய அறையில் படுக்க வைத்தார்கள். பட்டு மெத்தை விரித்த கட்டில் ஒன்றிலே துவண்டு கிடக்கும் பூங்கொடி போல இளவரசி கிடந்தாள். இமை மூடி அவள் தூங்கும்போது. கண் திறக்காத அழகிய பளிங்குச் சிலையொன்று சாய்ந்து கிடப்பது போலிருந்தது. அந்த அறையில், அரச பக்தியும், இளவரசியிடம் மிகுந்த அன்பும் கொண்ட தாதி ஒருத்தி காவலாக அமர்த்தப்பட்டாள். அவள் அல்லும் பகலும் அந்த அறையை விட்டு அகலாது காத்துக் கொண்டிருந்தாள்.

26