பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

99

விரும்பவில்லை. உடனே நான் தஞ்சைப் போலீசாருக்கு ஒரு தந்தியனுப்பி சாரதா என்ற தாசியைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கிறேன். அதுவுமன்றி, உமக்கு இந்த ஊரில் இன்னம் எத்தனை வீடுகள் இருக்கின்றனவோ, அவைகளை எல்லாம், நான் கிரமப்படி சோதனை போட்டுப் பார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், பிற்பாடு, அதைப்பற்றி ஏதாவது கேள்வி பிறக்கும். ஆகையால் உம்முடைய வீட்டு விலாசங்களைக் கொடும். இதோ இருக்கும் வீட்டில்தான் யாரோ சாயப்பு இருக்கிறார். அந்த வீட்டை நான் இப்போதே சோதனை போட்டுப் பார்த்துவிடுகிறேன். பிறகு மற்றவைகளுக்குப் போகிறேன்” என்றார்.

உடனே மாசிலாமணி, தங்களுக்குச் சொந்தமான மற்ற இரண்டு வீடுகளின் விலாசத்தையும் சொல்ல, இன்ஸ்பெக்டர் தமது கை நோட்டுப் புஸ்தகத்தில் குறித்துக் கொண்டபின் தம்மோடு வந்திருந்த இரண்டு ஜெவான்களை நோக்கி, “அடேய், நீங்கள் இரண்டு பேரும் இந்த மதிலடியிலேயே நின்று கொண்டிருங்கள். நான் மற்ற ஜெவான்களை அழைத்துக் கொண்டு உடனே போய், சாயப்பு இருக்கும் இந்த வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கிறேன். நாங்கள் இங்கே இருந்து, அங்கே போய்ச் சோதனை போடுவதற்குள், சட்டைநாத பிள்ளை அந்த வீட்டிற்குள் இருந்து ஒருவேளை இந்த வீட்டிற்குள் வந்தாலும் வந்திருக்கலாம் என்ற சந்தேகம், நம்முடைய மனசிலேயே பின்னால் உதித்து வதைக்கும். அதற்கு இடங்கொடுக்காமல், செய்வதைத் திருந்தச் செய்துவிடுவோம்” என்று கூறிவிட்டு மாசிலாமணியின் முகத்தை உற்று நோக்கினார். சாயப்பு இருக்கும் வீட்டை தாம் சோதனை போடப் போவதாகச் சொல்வதைக் கேட்டு, அவன் ஒருவேளை அஞ்சிக் கலங்குகிறானோ என்பதைக் கவனித்தார். அவனது முகம் நிச்சலனமாகவும், எந்தக் குறிப்பையும் தோற்றுவியாமலும் இருந்தது. இன்ஸ்பெக்டர் அதற்கு மேல் மாசிலாமணியோடு யாதொரு வார்த்தையும் பேசாமல் ஜெவான்களை மதிலண்டை நிறுத்திவிட்டு மாசிலாமணியை அழைத்துக் கொண்டு, வந்த வழியாகவே திரும்பி அவனது மாளிகைக்குள் போய், அவ்விடத்தில்