பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மாயா விநோதப் பரதேசி

இல்லை; இது தான் இந்தக் கருப்பு மனிதர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் உள்ள தாரதம்மியம். எந்த விஷயத்திலும் வெள்ளைக்காரர்கள் ஒழுங்காகவும், முன்யோசனையான தக்க ஏற்பாடுகளுடனுமே நடந்து கொள்வார்கள். அவர்களுக்குப் பொருளைக் காட்டிலும் பொழுதே நிரம்பவும் முக்கியமானது. அநாவசியமாக அவர்கள் ஒரு நிமிஷப் பொழுதைக்கூட வீணாக்க மாட்டார்கள்; அவர்கள் தங்களுடைய செளகரியத்தையும் பிறருடைய செளகரியத்தையும் கலந்து இரண்டிற்கும் கெடுதல் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். இப்போது வந்திருக்கும் அம்மாள் இங்கே வந்தால் இலேசில் என்னை விட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. அவர்கள் படிப்பின் யோக்கியதையையும், காலத்தின் அருமையையும் அறிந்தவர்களாக இருந்தால், என்னுடைய அவசர சந்தர்ப்பத்தை உணர்ந்து உடனே போய்விடுவார்கள். அந்த அம்மாள் அநேகமாகப் படிக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். வந்தால் சாயுங்காலம் வரையில் அநாவசியமான விஷயங்களை எல்லாம் பேசி என் பொழுதை எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்பது திண்ணம் ஆகையால், நான் இவர்களை, இப்போது பார்ப்பதைவிட, பார்க்காமல் இருப்பதே நல்லதென்று நினைக்கிறேன். பெண்ணை இவர்கள் பார்த்து என்ன செய்யப் போகிறார்கள்? வாசிக்காத முட்டாளாக இருந்தால், பெண்ணைப் பார்த்து அதன் குணா குணங்களை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் பி.ஏ. வகுப்பில் படிக்கிறேன் என்பது இவர்களுக்கு எப்படியும் தெரிந்திருக்கலாம். அதில் இருந்தே என்னுடைய யோக்கியதையை இவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் அழகாக இருக்கிறேனா என்று பார்க்க இவர்கள் ஒருவேளை ஆசைப்படலாம். அதைப் பார்ப்பதற்கு என் புருஷர் ஆசைப்படுவது நியாயமேயன்றி, இவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கிறேன் என்று என் புருஷரிடம் தெரிவிக்கப் போகிறார்களோ? நாம் ஒரு காரியம் செய்யலாம். தபால் கார்டு அளவில் எடுக்கப்பட்ட என்னுடைய போட்டோகிராப் படம் நாலைந்து இருக்கின்றன. ஒரு படத்தை ஒரு காகிதத்தில் வைத்து மடித்துத் தருகிறேன்.