பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

3

தகதகவென மின்னிய அகன்ற ஜரிகையுள்ள தும்பைப் பூவைப் போல வெளுத்திருந்த பட்டுக்கலந்த ஜரிகை வஸ்திரம் ஒன்றையும், உடம்பில் உயர்ந்த பட்டு ஷர்ட்டையும், அதற்கு மேல் முற்றிலும் ஜரிகையினாலும் சிவப்புப் பட்டினாலும் நெய்யப்பெற்ற உருமாலை ஒன்றையும் அணிந்திருந்தான். நவரத்தினங்கள் இழைத்த சுமார் ஆயிரம் ரூபாய் விலையுள்ள சிறிய கைக் கடிகாரம், வயிரம் இழைத்த தங்கச் சங்கிலியால் அவனது இடதுகை மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது. இவனது இரண்டு கைகளிலும், வைரம், வைடூரியம் முதலிய உயர்தரக் கற்கள் குயிற்றிய மோதிரங்கள் பல விரல்களிலும் கானப்பட்டன. அவனது இயற்கைக் கட்டழகும் காந்தியும், செயற்கை அலங்காரமும் ஒன்று சேர்ந்து அவனைக் காணும் ஆண் பெண்பாலார் அனைவரும் மேன்மேலும் அவனை ஆசையோடு கூர்ந்து நோக்கும்படியான ஒருவித அற்புதக் கவர்ச்சியை உண்டாக்கின அன்றி, அவன் ஒரு மகாராஜனது குமாரனோ, அல்லது, யாதாமொரு சமஸ்தானாதிபதியின் பட்டக் குழந்தையோ என்ற எண்ணத்தை உண்டாக்கின.

இத்தகைய சிலாக்கியமான விடபுருஷனுக்கு எதிர்ல் உட்கார்ந்திருந்த மற்றவன் மாநிறமாகவும், அதிக அழகில்லாத சாதாரண வடிவம் உடையவனாகவும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணியாதவனாகவும் இருந்தான். ஆனாலும், தீவிர புத்தியும், திடசித்தமும், எதைக் குறித்தும் மளமளவென்று விரைவில் பேசும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான். அன்றைய பகல் முழுதும் தகத்தகாயமாய்க் காய்ந்து அண்டாண்ட பிரம்மாண்டங்களில் எல்லாம் நிறைந்து புழுக்கள், பூச்சிகள், சிசுக்கள், நோயாளிகள் முதலிய எந்த ஜெந்துவினிடத்திலும் தயை தாட்சணியம் இன்றி எல்லோரையும் சமமாகச் சுட்டெரித்துக் கொடுங்கோல் அரசு புரிந்த கதிரவன், இரவு வருவதைக் கருதி, தனது பிரியபத்தியான குளிர்ந்த சந்திரனுக்கு முன் தான் தன்து கோர வடிவத்தைக் காட்டக் கூடாதென்று நினைத்து தனது கொடிய கிரணங்களை எல்லாம் மறைத்து கனிந்த இனிமையான மாம்பழம் போல உருமாறி, பரம சாதுவாய் விளங்கி, தனது மனைவி இருக்கும் வரையில் தான்