பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

211

பெருமையும், அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களும் எப்படிப்பட்டவை என்பது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இங்கிலீஷ் புஸ்தகங்களைப் படித்து, இங்கிலிஷ்காரரோடு பழகி, அந்தத் தேசத்தாருடைய நாகரிகங்களை எல்லாம் அறிந்தவருக்கு அன்றி, எங்களைப் போன்றவருக்கு, நீங்கள் சொல்வதின் உண்மை அவ்வளவாகத் தெரியாது. பாலின் நிறம் எப்படி இருக்கும் என்று பிறவிக் குருடனிடம் சொன்னால், அவன் அதை எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறான். ஆனால் நான் பொதுவாக ஒரு நியாயம் சொல்லுவேன். எந்த மனிதரும் சாதாரணமாகத் தம்முடைய பெரியோர்கள் பெற்றோர்கள் எப்படிப்பட்ட நடையுடை பாவனை பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவைகளையே இயற்கையில் பின்பற்றி நடக்கிறவர்களாய் இருக்கிறார்கள். புதிதாக உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கிறவர்கள் அதற்கு முன் இருந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணத்தையாவது, அதன் உசிதா உசிதத்தையாவது ஆராயாமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றியே நடக்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த நியாயத்தை அனுசரித்தே நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் தங்களுடைய ஆசார ஒழுக்கங்களைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள். இப்போது அன்னிய தேசத்தாருடைய சம்பந்தமும், அன்னிய தேச பாஷையின் அறிவும் நம்முன் சிலருக்கு ஏற்பட்ட உடனே, அவர்கள் தங்களுடைய நடையுடை பாவனை பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு புதுமாதிரியாக நடக்க எத்தனிக்கிறார்கள்; இங்கிலீஷ் கற்காத இதர ஜனங்கள் செய்வதெல்லாம் தவறென அவர்களுடைய மனசுக்குப்படுகிறது. அவர்களுக்கு அது உண்மையாகவே இருக்கலாம்; ஆனால் அவர்கள் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்களும் அம்மாதிரி மாறிப்போவதுதான் சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் உங்களைப் போலப் புது விஷயங்களை அறிந்து அனுபவித்துத் தீர ஆராய்ந்து மாறுபட வேண்டுமே அன்றி, ஒருவர் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்கள் திருந்தி விடுகிறதுதான் நிரம்பவும் அரிது. நீங்கள் சொல்வது போல