பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

5

அதைக் கேட்ட கோபாலசாமி, “இன்று பெளர்ணமி அல்லவா. அதனால் தான் சந்திரன் பூர்ணவடிவத்தோடு இருக்கிறது. நாமும் இத்தனை வருஷமாக இந்தச் சென்னப் பட்டனத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரையில் நாம் இந்த இடத்துக்கு வராமல் இருந்தது நம்முடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இந்த இடம் மோகினி தேவியின் சிங்கார வனம் போல் அல்லவா தோன்றுகிறது. ஆகா! எந்தப் பக்கம் பார்த்தாலும் நேத்திராநந்தமாக இருக்கிறதே! சுவர்க்கலோகம் என்று ஒர் இடம் எங்கேயோ இருக்கிறதென்று சொல்லுகிறார்களே, அது இந்த இடந்தான் என்று நினைக்கிறேன். அதோ பார் மேற்குத் திக்கில் செளக்கு மரங்களே நிறைந்த தோப்புகளும், தெய்வத் தச்சனாகிய மயனால் நிர்மாணிக்கப் பட்டவையோ எனக் காண்போர் பிரமிக்கத்தக்க அற்புதமான மாடமாளிகைகளும் நிறைந்திருப்பதும், கிழக்குத் திக்கில் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கடல் சுத்தமாகப் பரவி இருப்பதும், அப்சர ஸ்திரீகளைப் பழித்த அபூர்வ வனப்புடைய யெளவன மங்கையர் பலவித உடைகளிலும் அலங்காரங்களிலும் மேரி மகாராணியார் கலாசாலை மாளிகையில் ஆங்காங்கு புஸ்தகமும் கையுமாக நின்று படித்தும், ஒருவரோடு ஒருவர் உல்லாசமாகப் பேசியும், விளையாடியும் மயில்களைப் போலவும், மான்களைப் போலவும், மாடப்புறாக்களைப் போலவும் காணப்படுவதும் ஒன்று கூடிய இந்த மகா அருமையான காட்சியைப் போல, இந்த லோகத்திலும், வேறே எந்த லோகத்திலும் நாம் காணமுடியாது என்றே நினைக்கிறேன். இந்த இடத்துக்கு வருவோர் மந்திர சக்தியினால் தடைக்கட்டப் பட்டு ஒய்ந்து நிற்கும் பாம்பு போல, இந்த இடத்தின் காந்த சக்தியில் லயித்து அப்படியே பிரம்மாநந்த நிலையில் உட்கார்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். அதோ அந்தப் பக்கம் திரும்பிப் பார் அனாதைகளான கைம்பெண்கள் வசிப்பதற்கும், கல்வி பயில்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் மாளிகை எப்படி இருக்கிறது பார்த்தாயா? அது பழைய காலத்தில் இருந்த நம் தேசத்து அரசர்களுடைய கோட்டைகள் போல் அல்லவா மகா புதுமையாக இருக்கிறது. கந்தசாமி நான் எத்தனையோ தடவை உன்னைக் கூப்பிட்டும், நீ வரமாட்டேன் என்று சொல்லி,