பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மாயா விநோதப் பரதேசி

தாகவும், அநேகமாய் இரவில் திரும்பி வந்து விடலாம் என்றும் சொன்னான். அவர் திரும்பி வந்துவிட்டாரா என்பதையும் அறிந்து கொண்டு வரும்படி நம்முடைய பெரிய தம்பிக்குச் சொல்லி அனுப்பி இருக்கிறேன். இரண்டு இடங்களுக்கும் போய்விட்டு வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும் அல்லவர். திரும்பிவரும் நேரம் ஆய்விட்டது. வந்துவிடுவான்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "ஓகோ! அப்படியா சங்கதி! அதற்காகவா போயிருக்கிறான்! வழக்கமாக ஏழு மணிக்கே வந்து சாப்பிடுகிற குழந்தை இந்நேரம் வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எங்கே காணோமே' என்று வடிவாம்பாள் என்னிடம் இதற்குள் நூறுதரம் கேட்டு விட்டாள். வடிவூ தம்பி போயிருக்கும் காரணம் தெரிந்ததா?" என்றாள்.

உள்ளே இருந்தபடி வடிவாம்பாள், “தெரிந்து கொண்டேன்" என்று மிருதுவாக மறுமொழி கூறினாள்.

உடனே திரிபுரசுந்தரியம்மாள், "ஆம்; நாம் இத்தனை பேர் போகிறோமே, எல்லோரும் பட்டணத்தில் எங்கே இருக்கிறது? நம்முடைய புதிய சம்பந்தி எங்கேயாவது இடத்துக்கு ஏற்பாடு செய்யப் போகிறாரா?" என்றாள்.

வேலாயுதம் பிள்ளை, "நமக்குப் பிரத்தியேகமான இடம் அமர்த்தி வைக்கலாமா என்று புதிய சம்பந்தி கடிதத்தில் எழுதிக் கேட்டிருந்தார். அவர்களுக்கு நாம் ஏன் வீண் சிரமம் கொடுக்க வேண்டும். என்று நான் இடம்: தேவையில்லை என்று எழுதி விட்டேன். நம்முடைய கந்தசாமியும் வேலைக்காரியும் இருப்பதற்காக நான் அமர்த்தி இருக்கும் வீடும் பெரிய மெத்தை வீடு; அது நிரம்பவும் வசதியானது கோகளேசுவரன் பேட்டையில் இருக்கிறது. அதில் ஒரே காலத்தில் இருநூறுபேர் வசதியாக இருக்கலாம். ஒரு நாள் இருந்துவிட்டுத் திரும்பப் போகிற நமக்கு அந்த இடமே போதுமானது. அதையே நன்றாகச் சுத்தம் செய்து, வாழை மரங்கள் தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரித்து வைக்கவும், சுமார் ஐம்பது ஜனங்களுக்குச் சாப்பாடு, படுக்கை முதலியவைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கி