பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மாயா விநோதப் பரதேசி

உண்டாகாமலா போய்விடும். இருக்கட்டும். நான் மறுபடியும் கூப்பிட்டுப் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு, "யார் கட்டிலில் படுத்திருக்கிறது?" என்று சாதாரணமான குரலில் கூப்பிட்டுப் பார்த்தான். அதற்கும் மறுமொழி கிடைக்கவில்லை. அங்கே இருந்த மனிதர் அசைவதாகவும் தோன்றவில்லை. கண்ணப்பாவின் மனம் நிரம்பவும் குழம்பித் தவிக்கத் தொடங்கியது. அந்தக் கட்டிலின் மேல் படுத்திருப்பது யார், அவர் அவ்வாறு முகத்தையும் மூடிக்கொண்டு பேச்சு மூச்சின்றி ஏன் படுத்திருக்கிறார், சாமியார் தங்களை அங்கு ஏன் அனுப்பினார் என்ற பல கேள்விகளை அவனது மனதே கேட்டுக் கொண்டது. சாமியார் தங்களை ஏதோ கருத்தோடு அந்த அறைக்கு அனுப்பி இருக்கையில், தாம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அவ்விடத்தை விட்டுத் திரும்பிப் போய் அவருக்கு முன் ஒன்றும் தெரியாமல் விழிப்பது சரியல்ல என்று நினைத்த கண்ணப்பா ஒருவாறு துணிவடைந்து கட்டிலில் படுத்திருந்த மனிதரது முகத்தைத் திறந்தான். திறக்கவே, அவன் அப்படியே பிரமித்துத் திகைத்து ஸ்தம்பித்து திகில் கொண்டு நடுநடுங்கிப் போய் விட்டான். துப்பட்டி விலக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட முகம் தத்ரூபம் திகம்பரசாமியாரது முகம் போலவே காணப்பட்டது. அதன் நிறம் சாமியாரது உடம்பின் நிறம் போலக் காணப்பட்டது. கண்கள் இரண்டும் துயில்வது போல மூடப்பட்டிருந்தன. மூக்கு, கன்னங்கள், நெற்றி, புருவவில்கள், வாய், காதுகள் முதலிய எல்லா உறுப்புகளும் சாமியாருடைய முகத்தின் உறுப்புகள் போலவே இருந்தன. தாங்கள் மெத்தைப் படியின் வழியாக மேலே ஏறி அங்கே வருவதற்கு முன் சாமியார் வேறே குறுக்கு வழியாக தங்களுக்கு முன் அங்கே வந்து படுத்துக் கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றியது; அவன் உடனே பின் பக்கம் திரும்பி "வடிவூ! இப்படி ஓடி வா! இந்த விநோதத்தைப் பார். நம்முடைய சுவாமியார் ஐயா கீழே அல்லவா படுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எப்படியோ மாயமாக நமக்கு முன்னால் இங்கே வந்து. கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றான்.