பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

9

அவற்றையே துரிதப்படுத்தும் கலைப்படைப்புகளை வழங்குகிறது.

எல்லாக் கலைஞர்களும், சமூக வாழ்க்கையின் முரண்பாடுகளில் இருந்துதான் கலைப் படைப்புகளைத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் இயக்கப் போக்கை மேலும் மேலும் அறிந்து கொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கமும் பெறும்பொழுது அவர்களுடைய கலைப் படைப்புகள் செழுமையடைகின்றன.

மார்க்சீய அழகியல் அறிவு எல்லா வகையான கலைப் படைப்புகளையும் படைப்பவனுக்குத் துணை செய்கிறது. வாசகனுக்கும் அளவுகோல்களை வரையறுத்துத் தருகிறது. எல்லாக் குறுகிய நோக்கங்களுக்கும் மார்க்சீயம் எதிரியாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து லெனின் எழுதினார்:

மார்க்சீயம் எல்லாத் துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப் பாதையில் மார்க்சீயம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளைக் கூர்மையுடைய மூளைகள் எழுப்பியுள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சீயம். -

அது போன்றே கலைத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் உலக முற்போக்கு இலக்கியங்களுக்கெல்லாம் வாரிசுகளாக மார்க்சீயவாதிகளும் பிற முற்போக்குவாதிகளும் விளங்குகிறார்கள்.

ஹோமர், தாந்தே, ஷில்லர், இளங்கோ, காளிதாசன், கம்பன் போன்ற காப்பியக் கலைஞர்கள், புற வாழ்க்கையையும் அக வாழ்க்கையையும் அக்காலக் கலை வடிவங்களில் படிமங் களாகப் படைத்தார்கள். வாழ்க்கையியக்கத்தைக் குறியீடு களாகவும் (images) படிமங்களாகவும் படைத்தார்கள். தெய்வங்களுக்கும் மனிதனுக்கும் நடைபெறும் போராட்டமாக இலியாதை ஹோமர் பாடினார். தெய்வங்கள் என்ற மனித சக்திக்கு மீறிய இயற்கைக் கூறுகளை எதிர்த்துப் போராடுகிற மனிதனைக் குறியீட்டு முறையில் கலைப் படிமம் ஆக்கினார்கள்; நிகழ்கால சமூக மதிப்புகளை, வருங்கால மதிப்புகளால் மாற்றினார்கள்.

மார்க்சும் எங்கல்சும் அடிமைச் சமுதாயம் முதல், முத லாளித்துவச் சமுதாயம் வரை மனித குலத்திற்குக் கலைச்செல் வங்களைத் தந்த கலைப்படைப்புகளைப் போற்றிப் பேசியுள்ளார்கள். லெனின் அவர்கள் மரபையே பின்பற்றி, சமகாலக்கலைப் படைப்பாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.