பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நா. வானமாமலை

வெளிப்படை. படிமம் இன்றியே பொருள் இருக்க முடியும் என்பதும் தெளிவு.

2 உணர்வு என்பது முழு முதல் பொருளன்று. அது வழி வந்த பொருள்.

இதனைத்தான் லெனின் 'இரண்டாவது நிலை ' என்று கூறுகிறார் (Secondary). முதலில் பொருள்; பின்னர் அதன் பிரதிபலிப்புப் படிமம்.

இரு வகைகளில் இது உண்மையாகும். உணர்வு என்பது வளர்ச்சியின் விளைவும், பொருளின் குணமும் ஆகும். இரண்டாவது, புறவயமான பொருளுண்மையே நமது உணர்வுகளையும் புலனுணர்வுச் சித்திரங்களையும் கருத்துக்களையும் உருவாக்குகிறது.

சமூக உணர்வை ஆராய லெனின் இந்த அறிவுத்தோற்றவியல் கருத்தைப் பயன்படுத்துகிறார்.

"உணர்வு பிரதிபலிக்கிறது" ---- இதுவே எல்லா பொருள் முதல்வாதத் தத்துவங்களின் அடிப்படைக் கருத்தாகும் என்று லெனின் எழுதினார்.

புறவய உலகைப் பிரதிபலிப்பது, செயலூக்கமான இயக்கவியல் நிகழ்ச்சி. மிகச் சுலபமான பிரதிபலிப்புக் செயல்களான புலன் உணர்வு, புலன் அறிவு (Perception) ஆகிய இரு செயல்களில் கிடைக்கும் புள்ளிகளில் இருந்து (data) அறிவுபூர்வமான சிந்தனை மூலம் இயற்கை விதிகளும் கருத்தமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன; அறிதல் என்பது இவையனைத்தும் அடங்கிய பொதுவான செயல்முறை. அது முழு முதல் உண்மையை நோக்கி விரையும் இயக்கம். தராதரப் பகுதி உண்மைகளின் கூட்டுக் கருத்தான முழு உண்மையை அடைவதற்கான இயக்கமே அறிதலாகும்.

ஒவ்வொரு விஞ்ஞானத்தின் அறிவும், எல்லைக்குட்பட்டது. இவை தராதர உண்மைகள். இவற்றின் வளர்ச்சி, முழு உண்மையை அடையச் சில வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. மனிதனது சிந்தனை முழு உண்மையை அடையும் தகுதியுடையது. எல்லாத் துறைகளின் ஒரே சீரான வளர்ச்சி, முழு உண்மையை நோக்கி இயங்குகிறது. அப்பொழுது தனித் தனித் துறைகளின் எல்லைக் கோடுகள் பல இடங்களில் அழிக்கப்பட்டு, துறை தோறும் அறிவுக் கலவையாகிறது. எடுத்துக்காட்டாக பெளதீகம், வானவியல், உயிரியல் முதலிய துறைகளின் அறிவுக் கலப்பால் புதிய இயல்கள் ஏற்பட்டுள்ளன. விண்வெளி உயிரியல், விண்வெளி ரசாயனம், விண்வெளி பெளதீகம் என்பன பல தரையியல் விஞ்ஞானங்களின் கூட்-