பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

நா. வானமாமலை

பதையும் காட்டி அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுகிற தொழிலாளி வர்க்கப் பிரதிநிதிகளைக் கலைப் படைப்பாக்கிப் போராடுகிற, பிளவுபட்ட சமுதாயத்தைச் சித்திரிக்கிறார். இதில் வெற்றி யாருக்கு என்பதைச் சூசகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பின்னர் வர்க்க இணைப்பிற்குத் தத்துவமும் அரசியலும் தேவை என்பதையும், அதனைத் தொழிலாளி வர்க்கக் கட்சியே தொழிலாளருக்கு அளிக்க முடியும் என்பதையும் உணர்ந்து 'தாய்' என்ற நாவலில் சித்திரிக்கிறார். இவையனைத்தும் தொழிலாளி வர்க்கப் பாத்திரங்களின் மூலமே, சமூகத்தில் அவர்களது வர்க்கப் போராட்டங்களில் தத்துவ அரசியல் தாக்கத்தால் தனித் தொழிலாளிகள் இணைந்து கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது என்பதை அவர் காட்டுகிறார். தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மாற்றங்கள் படிப்படியாக, இயல்பாகத் தொழிற்சங்கங்களாலும் கட்சியினாலும் வழி நடத்தப்பட்டு, கம்யூனிசத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன என்று காட்டுகிறார்.

அவருடைய பெருமை தொழிலாளி வர்க்கக் கதாபாத்திரங்களை உலக இலக்கியத்தில் உலவவிட்டது மட்டுமன்று.

மாபெரும் வரலாற்றுப் புரட்சிகளில் விரோத வர்க்கங்களின் செயல்பாடுகளையும் அவர் சித்திரித்துள்ளார். நிலப் பிரபுத்துவ ஆட்சியில் விவசாயிகளின் போராட்டங்கள், நில அடிமை முறையை அகற்றுவதன் காரணங்கள், சில நில அடிமைகள் பணம் இருந்ததன் காரணமாக வணிக வர்க்கமாக மாறியது, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் இவர்களது அழிவு ஆகியவற்றையெல்லாம் அவர் சித்திரித்துள்ளார். பொதுவாக வரலாற்றை அவர் பல வர்க்கங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தும் போராட்டமாகத் தான் காண்கிறார். இவற்றுள் தொழிலாளி வர்க்கம், எல்லா வர்க்கங்களையும் விடுதலை செய்யும் கடப்பாடு உடையது. ஏனெனில் சுரண்டல் சமுதாயத்தின் அடிப்படையான, மனிதனை மனிதன் சுரண்டுகிற வழக்கத்தையே அது எதிர்க்கிறது.

பிற வர்க்கங்களை விடுதலை செய்யாமல் தொழிலாளி
வர்க்கம் விடுதலை பெறமுடியாது.

தன்னை விடுதலை செய்து கொள்ளும்பொழுதே அது

எல்லா வர்க்கங்களையும் விடுவிக்கிறது

என்று மார்க்ஸ் எழுதினார்.