பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரபும் மாற்றமும்

83

 இந்நாவல், ஒர் இனத்தின் தனி மனிதர்களைப் பற்றிய கதை. ஆனால் இது பல இனங்களின் வளர்ச்சிப் போக்குக்கு எடுத்துக்காட்டு. துருக்மேனிய, அஸர்பைஜானிய, டாஜிக் மக்களின் வளர்ச்சியும் இது போன்றதே. இவர்களது சமூக மாற்றங்களைப் பொருளாகக் கொண்டு நூற்றுக்கணக்கான நாவல்களை அந்தந்த தேசிய இன எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஒன்றைப்போல மற்றொரு நாவல் இராது. இனம், கலைஞன் ஆகிய இருவரது வேறுபாட்டால் கலைப் படைப்பு முறையும் வேறுபடும்.
'கலைப் படைப்பில் தனித்துவம், உள்ளடக்கத்தில் சோஷலிச, லெனினியக் குறிக்கோள்’ என்பது இவையனைத்திற்கும் பொதுவானது.
கஸாக் வாழ்க்கை வளர்ச்சியைப் பல நாவல்களில் ஷோலகோவ் சித்திரிக்கிறார். கன்னி நிலம், டான் நதி அமைதியாகப் பாய்கிறது ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்கன. டான் நதி அமைதியாகப் பாய்கிறது என்ற பல பகுதிகள் கொண்ட நாவல் உலகப் புகழை அவருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இதிலும் சோஷலிஸ்டு ரியலிசக் கோட்பாடான தனித்துவமும் சோஷலிசமும் இணைந்திருப்பதைக் காணலாம்.
இலக்கியப் படைப்புக்கு, மற்றொரு படைப்பு முறையைக் காட்டிலும் சோஷலிஸ்டு ரியலிசம் மிகுதியாகத் துணைபுரிகிறது.
அது ஒரு கலைப்படைப்பு முறைதான்.
ஹெசல், கலைப் படைப்புக் கூறுகள் பற்றிக் குறிப்பிடும்போது 'அஃப்ஹீப்ன்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதற்கு மூன்று பொருள்கள் உண்டு.
1 பாதுகாத்தல்
2 தொடர்ச்சியாக வளர்த்தல்
3 பயன்படுத்துதல்.
நமக்கு முந்தைய பண்பாட்டைப் பாதுகாத்து, தொடர்ச்சியாக வளர்த்து, பயன்படுத்தி, புதுமையான இலக்கியம் படைப்பவர்களே சோஷலிச ரியலிசக் சார்பாளர்கள் ஆவர்.
பழமைக்கும் புதுமைக்கும், மரபிற்கும் மாற்றத்திற்கும் உற்ற தொடர்புகள் இவை.